வாஷிங்டன்: ஈரான் மீதான புதிய தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக நீடித்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைந்து எட்டப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான்மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதல்களை நடத்தப்போவதாகத் திரு டிரம்ப் அச்சுறுத்தியதை அடுத்து, மோதல் மீண்டும் தீவிரமடையும் என்ற அச்சம் எழுந்தது. ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்குவைத்து மீண்டும் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.
எனினும், புதிய தாக்குதல்களை ஒத்திவைக்கும்படி ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டதாக அதிபர் டிரம்ப் கூறினார்.
“அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், விரைவாக உடன்பாடு செய்துகொள்ளும் நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்துசெய்ய ஒப்புக்கொண்டுள்ளேன்,” என்று திரு டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்துவிடுவதும் ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அந்த உடன்பாட்டில் இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலைத் தொடங்கின. ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் அம்மோதலுக்கு விரைவில் முடிவு எட்டப்படும் வாய்ப்புகள் தென்படவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட இணக்கமான கோரிக்கைகள் அடங்கிய முன்னைய போர்நிறுத்த உடன்பாடும் முறிந்தது.
வளைகுடா நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்தே புதிய தாக்குதல்களை ஒத்திவைக்கும் முடிவை அதிபர் டிரம்ப் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சவூதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், திரு டிரம்ப்பைத் தொடர்புகொண்டு தாக்குதல் திட்டங்களைக் கைவிட்டு, பதற்றத்தைக் தணிக்குமாறு வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜூலை மாதத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவியபோதிலும், ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின. ஈரானின் தற்காப்புக் கட்டமைப்புகள் பலவற்றை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் ஈரான் தற்போது அணுவாயுதக் குறைப்பு ஒப்பந்தத்திற்கு முன்வந்துள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தைக் கட்டுப்படுத்தி வரும் ஈரானால் இன்னமும் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, மத்திய கிழக்கு மோதல் எதிர்பாராத வகையில் தீவிரமடையக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவ்வட்டார நாடுகளின் தலைநகரங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

