ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

3 mins read
057db709-ae17-45d3-8e75-7ee32a5ce09f
பஹ்ரேனின் மனாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் எழுந்த கரும்புகை. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக அதன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக சனிக்கிழமையன்று (பிப்ரவரி 28) அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்தன.

இது மத்திய கிழக்குப் பகுதியை மீண்டும் போர்ச் சூழலுக்குத் தள்ளியுள்ளதுடன், மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் நீண்டகாலப் பிணக்குகளுக்குக் தூதரக ரீதியிலான தீர்வு காண்பதற்கான நம்பிக்கையையும் மங்கச் செய்துள்ளது.

ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களின் முழுமையான அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ராணுவ நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மிகக் கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாக ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈரானைப் பணிய வைக்க மத்தியக் கிழக்கில் பெரும் அமெரிக்க ராணுவப் படையைக் குவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது ‘டுரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பேச்சுவார்த்தைகளில் முக்கிய முட்டுக்கட்டையாக இருந்த ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் உள்ள ஏவுகணைத் திட்டம் குறித்து பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருவதாகவும் அவர்களின் ஏவுகணை இலட்சியத்தை அடியோடு அழிப்போம் என்றும் எச்சரித்தார்.

“ஈரான் விளைவிக்கும் அபாயங்களை உடனடியாக அகற்றி, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தற்போது ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் இல்லை என்றும் அவர் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த 12 நாள் வான்வழிப் போரைத் தொடர்ந்தும் ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்தவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விடுத்த தொடர் எச்சரிக்கைகளை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

“இஸ்ரேலுக்கு எதிராக உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக, ஈரான் மீது தாக்குதல்களை நடத்துகிறோம்,” என்று இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஈரானிய அதிபர் மசூது பெஸெஷ்கியான் பாதுகாப்பாக இருப்பதாக ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவும் இஸ்‌ரேலும் இணைந்து தாக்குதல்களை நடத்துவதால் ஈரானிய மக்களிடையே பேரளவில் பதற்றம் நிலவுகிறது.

பாதுகாப்பு கருதி பலர் தலைநகர் தெஹ்ரானிலிருந்து வெளியேறி கிராமங்களை நோக்கி விரைகின்றனர்.

பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ள ஈரான், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பல அரபு நாடுகளை நோக்கி அது ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.

குவைத், கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளின் முகாம்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் பாய்ச்சிய ஏவுகணை காரணமாக அபு தாபியில் ஒருவர் மாண்டுவிட்டதாக ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால் அது குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஈரானிய ஏவுகணை ஒன்று, சிரியாவில் உள்ள கட்டடம் மீது விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

பலர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு மத்தியக் கிழக்கில் உள்ள பல நாடுகளில் போர் காரணமாக உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்‌ரேலில் பள்ளிகளும் வேலையிடங்களும் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்‌ரேலிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்