சோல்: தென்கொரியாவில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க வீரர்கள் வட்டார ரீதியான அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் செயல்படுவதற்கான நீக்குப்போக்கு குறித்து ஆராயப்படும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
எனினும், வடகொரியாவைத் தடுப்பதில்தான் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
தென்கொரியாவுக்குச் சென்றிருந்தபோது திரு ஹெக்செத் பேசினார். தென்கொரியத் தற்காப்பு அமைச்சரையும் சந்தித்த அவர், வடகொரியாவுடனான ராணுவமற்ற எல்லைப் பகுதிக்கும் சென்றார்.
சீனா உள்ளிட்ட தீபகற்பத்திற்கு அப்பாற்பட்ட சச்சரவுகளில் தென்கொரியாவில் உள்ள 28,000 அமெரிக்க வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு ஹெக்செத், அணுவாயுத ஆற்றல் கொண்ட வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
தென்கொரியத் தற்காப்பு அமைச்சர் ஆன் கியூ-பேக் ராணுவமற்ற பகுதிக்குத் திரு ஹெக்செத்துடன் சென்று ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சிகளைப் பார்வையிட்டார்.
தைவானைப் பாதுகாப்பது, சீனாவின் வளரும் ராணுவத்தைக் கண்காணிப்பது போன்ற கொரியத் தீபகற்பத்திற்கு அப்பாற்பட்ட அச்சுறுத்தல்களிலும் தனது படைகளை ஈடுபடுத்த திட்டமிடுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தகைய பணிகளுக்கு அமெரிக்க வீரர்களை மாற்றிவிடும் அமெரிக்காவின் யோசனையைத் தென்கொரியா எதிர்த்தது. அதேநேரம், கடந்த 20 ஆண்டுகளில் தற்காப்புத் திறன்களை வளர்க்க தென்கொரியா பல முயற்சிகளை மேற்கொண்டது. தென்கொரியா தற்போது 450,000 வீரர்களைக் கொண்டிருக்கிறது.
அணுவாயுத ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்குத் தென்கொரியா வகுத்த திட்டங்களை ஆதரிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முடிவெடுத்தார். தென்கொரியாவுடன் வலுவான நட்புறவு இருக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே திரு டிரம்ப் அவ்வாறு செய்ததாகத் திரு ஹெக்செத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா தரும் ஆதரவுடன் 2030ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் அணுவாயுத ஆற்றல்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க முடியும் என்று தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

