ஹைட்டி மக்களைத் திரும்ப அனுப்பும் முயற்சியைத் தடுத்த அமெரிக்க நீதிபதி

ஹைட்டி மக்களைத் திரும்ப அனுப்பும் முயற்சியைத் தடுத்த அமெரிக்க நீதிபதி

2 mins read
5a279496-307c-4d57-a53a-364d39ba796d
ஹைட்டியில் தொடரும் வன்முறையால் ஆயிரக்கணக்கான ஹைட்டி மக்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். - படம்: இபிஏ

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள 350,000க்கும் அதிகமான ஹைட்டி நாட்டைச் சேர்ந்த மக்களின் சட்டபூர்வ பாதுகாப்பை ரத்துசெய்வதற்கான அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசாங்கத்தின் உத்தரவை அமெரிக்க நீதிபதி ஒருவர் தடுத்துள்ளார்.

அதன் மூலம் கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு ஆளாகியுள்ள ஹைட்டிக்கு அவர்கள் அனைவரும் திரும்ப அனுப்பப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹைட்டி மக்களின் தற்காலிகப் பாதுகாப்புத் தகுதியை ரத்து செய்ய அமெரிக்க உள்துறை அமைச்சு முயன்றது. அதை அமெரிக்க மாவட்ட நீதிபதி எனா ரியஸ் நிறுத்தும்படி தீர்ப்பளித்தார். கிளர்ச்சியாளர்களின் வன்முறையால் ஹைட்டியில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அமெரிக்காவில் தங்குவதற்கு கொடுக்கப்பட்ட சட்டரீதியான தகுதியை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியை எதிர்த்து ஹைட்டி மக்கள் வழக்குத் தொடுத்தனர்.

ஹைட்டி மக்களின் பாதுகாப்புத் தகுதியை ரத்து செய்ய முயன்ற உள்துறை அமைச்சர் கிரிஸ்டி நோஎம், அத்தகைய முடிவை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைச் சரிவர பின்பற்றத் தவறிவிட்டதாக நீதிபதி ரேயஸ் கூறினார்.

ஹைட்டி மக்களைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்கள், ஹைட்டி தொடர்ந்து ஆபத்தான இடமாக உள்ளது என்றும் நீதிபதியின் தீர்ப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

ஹைட்டி மக்களின் தகுதி ரத்தாகி சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்ற பெருங்கவலை நிலவியது என்ற வழக்கறிஞர்கள், நீதிபதியின் தீர்ப்பு மூலம் அமெரிக்காவில் இருந்து தங்கள் குடும்பங்களை அவர்களால் ஆதரிக்க முடியும் என்றனர்.

இயற்கைப் பேரிடர், வன்முறை போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் தஞ்சமடைய தற்காலிகப் பாதுகாப்புத் தகுதி வழங்கப்படுகிறது.

அத்தகைய தகுதி தற்காலிகமானது என்பதைச் சுட்டிய அமெரிக்க உள்துறை அமைச்சு, கள்ளக் குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கையாக அந்தத் தகுதியை ரத்து செய்ய முற்பட்டுள்ளது.

ஹைட்டியை 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதை அடுத்து 2010ஆம் ஆண்டு அந்நாட்டு மக்களுக்கு முதல்முறையாகத் தற்காலிகப் பாதுகாப்புத் தகுதி வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்