மீண்டும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

மீண்டும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

2 mins read
bc3476a6-2c83-4189-9b02-eaca0b895311
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 10) ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்று. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடத்தியுள்ளது.

அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிவிட்டதாகவும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரேன் ஆகிய நாடுகளில் வெடிப்புச் சத்தமும் அபாய ஒலியும் கேட்டதாக செய்தியாளர்கள் சிலரும் உள்ளூர் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

ஹோர்முஸ் நீரிணை மூடல்

அனுமதி வழங்கப்படாத பாதை வழியாகச் சென்றதாகக் கூறப்படும் கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து ஹோர்முஸ் மூடல் குறித்து அறிவிக்கப்பட்டது.

கடந்த சில நாள்காக அமெரிக்காவும் ஈரானும் ஒன்றை மற்றொன்று தாக்கிவரும் நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடப்பில் இல்லை என்று அறிவித்திருந்தார். எனினும், பேச்சுவார்த்தை தொடரக்கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஈரான் போரால் மத்திய கிழக்கு வட்டாரம் நிலைத்தன்மையின்றி இருந்துவருகிறது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவந்துள்ளதால் எரிசக்தி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அதனால் உலகளவில் பணவீக்கம் மோசமடைந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் பல கப்பல்கள் அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாகவும் அதுகுறித்துப் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் அக்கப்பல்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்றும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

போருக்கு முன்பு ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய், எல்என்ஜி எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வட்டாரத்தில் அமெரிக்காவின் தலையீடு தொடரும்வரை ஹோர்முஸ் நீரிணை மூடியிருக்கும் என்று ஈரானின் புரட்சிக் காவற்படை சொன்னது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

டிரம்ப் ‘உத்தரவு’

ஈரான்மீது தாக்குதல் நடத்த திரு டிரம்ப் உத்தரவிட்டார் என்று அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள்மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தப்போவதாக டெஹ்ரான் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்றும் அந்த நீரிணையில் எல்லா பாதைகளிலும் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அமெரிக்கா நிபந்தனைகளை விதித்துள்ளதாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்ததை மீறிவிட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்கப்பட்ட கப்பலில் 11 இந்தியர்கள்

ஓமானின் கிழக்குப் பகுதிக்கு அருகே தாக்கப்பட்ட கப்பலில் தங்கள் நாட்டவர் 11 பேர் இருந்ததாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஆகக் கடைசி நிலவரப்படி அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை முலம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்அமெரிக்காதாக்குதல்