ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற புதிய தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா, ஈரான்

ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற புதிய தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா, ஈரான்

3 mins read
a2913810-e35a-4ad2-acfb-580faca5e5d4
மே 4ஆம் தேதி, ஓமான் நாட்டின் முசண்டம் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள், படகுகள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் வளைகுடாப் பகுதியில் புதிய தாக்குதல்களைத் திங்கட்கிழமை (மே 4) தொடங்கின.

ஐக்கிய அரபுச் சிற்றரசில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, வளைகுடா வட்டாரத்தில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் விரிவுபடுத்தினால், அந்த நாட்டை “பூமியின் முகத்திலிருந்தே அழித்துவிடுவேன்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏப்ரல் 8ஆம் தேதி ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பதற்றம் நிலை இது.

இரு தரப்புமே மோதல் அதிகரிப்பதைத் தவிர்க்க விரும்பும் அதேவேளையில், அண்மைய மோதல்கள் ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய முற்றுகையைத் தொடர்வது அமெரிக்காவிற்கோ அல்லது ஈரானுக்கோ சாதகமானதல்ல என்பதைக் காட்டுகின்றன.

எனவே, இன்னும் சில நாள்களில் ஏதேனும் ஒரு தரப்பு இறங்கி வந்து சமரசத்தை ஏற்றுக்கொள்வது அல்லது இரு தரப்பும் மீண்டும் தீவிரமான போரில் ஈடுபடுவது ஆகிய இரண்டில் ஒன்று மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது. காலம் மிகக் குறைவாக உள்ளது. அதே வேளையில் உத்திகளுக்கான வாய்ப்புகளும் மிகவும் சுருங்கிவிட்டன.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தாக்குதல்களைத் தொடங்கின. அப்போதுமுதல் உலகளாவிய முக்கிய எரிசக்தி வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

வளைகுடா பகுதியில் சிக்கித் தவிக்கும் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புரொஜெக்ட் ஃபிரீடம்’ (project freedom) என்ற புதிய முயற்சியைக் கையில் எடுத்தார்.

அதனையடுத்து, இந்தப் புதிய ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. மே 4ஆம் தேதி வளைகுடாவில் உள்ள பல வணிகக் கப்பல்களில் வெடிப்புகள் அல்லது தீ விபத்துகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ஈரானின் ஏழு சிறிய ராணுவப் படகுகளை அழித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத் தளம் அமைந்துள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருக்கும் எண்ணெய்த் துறைமுகம் ஒன்றை ஈரானிய ஏவுகணைகள் தீக்கிரையாக்கியதாகவும் கூறப்பட்டது.

ஏழு சிறிய ஈரானியப் படகுகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வளைகுடா வட்டாரத்தில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல உதவுவதற்காகத் தாம் மேற்கொள்ளும் ‘புரொஜெக்ட் ஃபிரீடம்’ (project freedom) என்ற புதிய முயற்சியைப் பற்றிச் சமூக ஊடகங்களில் அறிவித்த திரு டிரம்ப், அது குறித்து மிகக் குறைவான விவரங்களையே வெளியிட்டார்.

நாடாளுமன்றத்திடமிருந்து போருக்காக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்கச் சட்டத்தின்கீழ் அவருக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து இரு நாள்களுக்குப் பிறகு அவர் இதனை அறிவித்தார்.

போர் நிறுத்தப்பட்டதால் காலக்கெடுவுக்கு இனி அவசியமில்லை என்றும் திரு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் தெரிவித்தார்.

ஆனால், அவரின் அக்கூற்றில் உண்மைத் தன்மையில்லை என உறுப்பினர்கள் சிலர் வாதிட்டனர்.

மே 4ஆம் தேதி நடந்த தாக்குதல்கள், நெருக்கடிக்கு ராணுவ ரீதியான தீர்வு ஏதும் இல்லை என்பதைக் காட்டுவதாக ஈரானிய வெளியுவு அமைச்சர் அபாஸ் அராக்சி தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தலைமையில் நடந்துவரும் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவித்த அவர், தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்படும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அமெரிக்காவையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளையும் கேட்டுக்கொண்டார்.

‘புரொஜெக்ட் ஃபிரீடம்’ என்பது ஒரு முட்டுக்கட்டைத் திட்டம் எனத் தமது சமூக ஊடகப் பதிவில் அவர் சாடினார்.

குறிப்புச் சொற்கள்