துபாய்: ஈரான்மீது அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தாக்குதல் நடத்தியது. ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா வானூர்தி மூலம் சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக ஈரானைத் தாக்கியதாக அமெரிக்கா சொன்னது.
அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் செய்துகொண்ட அமைதி உடன்பாட்டின் விதிகளை மீறுவதாக அமெரிக்காவும் ஈரானும் ஒன்றை ஒன்று சாடிவருகின்றன.
ஏவுகணை, ஆளில்லா வானூர்திகள் போன்றவை வைக்கப்பட்டிருந்த கிடங்குகள், கரையோரக் கண்காணிப்புத் தளங்கள் ஆகியவை தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்தது.
அந்தத் தாக்குதல் நிறைவடைந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்வதற்கு, தொடர்ந்து ‘பாதுகாப்பான வழித்தட ஒருங்கிணைப்பையும் ஆதரவையும்’ வழங்கப்போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, “ஈரான் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. நாம் அதனை மதித்து நடந்துள்ளோம். அந்த உடன்படிக்கை செயல்படுத்தப்படும் விதத்தில் அவர்களுக்கு ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவர்கள் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு பேசலாம்.
ஆனால், வன்முறைக்கு வன்முறை மூலமே பதிலடி கொடுக்கப்படும்,” என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் சமூக ஊடகம் வழியாக எச்சரித்துள்ளார்.
ஆனால், ஈரானின் தென்பகுதியில் உள்ள சிரிக் என்ற கப்பல்துறையை அமெரிக்காவின் ஏவுகணை தாக்கியதாகவும் அதற்குப் பதிலடியாக ஈரானின் கடற்படை அமெரிக்காவின் ஏவுகணைகளைத் தாக்கியதாகவும் ஈரான் ஊடகம் குறிப்பிட்டது.
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று கூறிய ஈரான், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்றும் எச்சரித்தது.
ஓமானின் கரையோரப் பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல்மீது வியாழக்கிழமை (ஜூன் 25) தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஈரான் அந்த எச்சரிக்கையை விடுத்தது.
அதன் தொடர்பில் ஈரானைக் குறைகூறிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கடந்த வார உடன்பாட்டை அது மீறியுள்ளதாகச் சாடினார்.
ஓமானுக்கு அருகில் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கொடியேந்திய தனது ‘எவர் லவ்லி’ கப்பல் தாக்கப்பட்டதாகத் தைவானின் எவர்கிரீன் மரின் நிறுவனம் குறிப்பிட்டது.
யாருக்கும் எந்தக் காயமும் இல்லை என்றும் கப்பல் அதன் பயணத்தை மீண்டும் தொடங்கிவிட்டது என்றும் நிறுவனம் கூறியது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலும் ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பும் சண்டையை நிறுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

