தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செய்யாத குற்றத்துக்காக 48 ஆண்டுகள் சிறை; ஆடவருக்கு $9.4 மில்லியன் இழப்பீடு

2 mins read
d2f69bb4-810a-4dd4-9032-b6e1cb88c94d
சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோரில் அமெரிக்க வரலாற்றில் ஆக அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவர் திரு கிளின் சிம்மண்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. - படம்: கிளின் சிம்மண்ஸ்

வாஷிங்டன்: செய்யாத குற்றத்துக்காக கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்த ஆடவருக்கு இழப்பீட்டுத் தொகையாக 7.15 மில்லியன் அமெரிக்க டாலர் (S$9.35 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது.

71 வயது திரு கிளின் சிம்மண்சுக்கு அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் எட்மண்ட் நகரம், ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று அந்த இழப்பீட்டுத் தொகையைத் தந்தது.

சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோரில் அமெரிக்க வரலாற்றில் ஆக அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவர் திரு சிம்மண்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

48 ஆண்டுகள், ஒரு மாதம், 18 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டு 2023ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் சிக்கவைக்க தமக்கு எதிராக காவல்துறையினர் போலி ஆதாரங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறி திரு சிம்மண்ஸ் வழக்கு தொடுத்திருந்தார்.

இதற்குப் பகுதி தீர்வாக இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக திரு சிம்மண்சின் வழக்கறிஞர்கள் கூறினர்.

“தமது வாழ்க்கையின் பெரும் பகுதியைத் திரு சிம்மண்ஸ் இழந்துவிட்டார். அது அவருக்குத் திரும்ப கிடைக்கப்போவதில்லை. ஆனால் தமக்கு நேர்ந்த அநியாயத்துக்குக் கூடுதல் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டே இனி உள்ள வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு இந்த இழப்பீட்டுத் தொகை கைகொடுக்கும்,” என்று திரு சிம்மண்சின் தலைமை வழக்கறிஞரான எலிசபெத் வாங் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து எட்மண்ட் நகரின் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

1974ஆம் ஆண்டில் கொள்ளைச் சம்பவத்தின்போது மதுபானக் கடையில் பணிபுரிந்த ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 1975ஆம் ஆண்டில் திரு சிம்மண்சுக்கும் திரு டான் ராபர்ட்ஸ் என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனை பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவத்தின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு தலையில் படுகாயம் ஏற்பட்டும் உயிர் தப்பிய பதின்மவயது வாடிக்கையாளர் ஒருவரின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

சந்தேக நபர்களை காவல்துறையினர் வரிசையில் நிற்க வைத்தபோது திரு சிம்மண்சும் திரு ராபர்ட்சும் குற்றம் புரிந்ததாக அப்பெண் அடையாளம் காட்டினார்.

ஆனால் அவர் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்ற சந்தேகம் அப்போதே மேலோங்கி இருந்தது.

அந்த மதுபானக் கடை ஊழியர் கொலை செய்யப்பட்டபோது தாங்கள் இருவரும் ஓக்லஹோமாவில் இல்லை என்று வழக்கு விசாரணையின்போது திரு சிம்மண்சும் திரு ராபர்ட்சும் தெரிவித்திருந்தனர்.

திரு சிம்மண்ஸ் நிரபராதி என்று அமெரிக்க மாவட்ட நீதிபதி ஏமி பலும்போ தீர்ப்பளித்து அவரை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலை செய்தார்.

திரு ராபர்ட்ஸ் 2008ஆம் ஆண்டில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்