வாஷிங்டன்: அமெரிக்க அதிகாரிகள் மியன்மாரின் எதிர்த்தரப்பினரை ஆகஸ்ட் 16ஆம் தேதி காணொளி வாயிலாகச் சந்தித்தபோது நேரடி ஆதரவை விரிவுபடுத்த உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் மக்களாட்சி முறைக்கு மாறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அவ்வாறு உறுதியளித்ததாகவும் ராணுவ ஆட்சிக்குழு மீதான நெருக்குதலைத் தொடர அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.
மியன்மாரில் அமைதியையும் சமரசத்தையும் மேம்படுத்த அண்டை நாடுகள் உதவ வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்ட மறுநாள் அமெரிக்க அமைச்சின் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு ஆலோசகர் டாம் சலிவன், அமெரிக்காவின் அனைத்துலக மேம்பாட்டு அமைப்பின் (யுஎஸ்ஏஐடி) துணை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஷிஃப்ஃபெர் இருவரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி, மியன்மார் ஜனநாயக ஆதரவு அமைப்புகளின் முக்கியத் தலைவர்களுடன் காணொளி வாயிலாகப் பேச்சு நடத்தினர்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கச் சீனா உறுதி கூறியிருப்பதாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி மியன்மார் அரசாங்க ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ராணுவ அரசாங்கத்தின் மீதான நெருக்குதலைத் தொடர்வது குறித்துத் திரு சலிவனும் மியன்மார் எதிர்த்தரப்புக் குழுக்களும் இணக்கம் கண்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஜனநாயக ஆதரவாளர்கள் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும் அத்தியாவசியப் பொதுச் சேவை வழங்குதல், தேவைப்படுவோருக்கு மனிதநேய உதவி வழங்குதல் ஆகியவை தொடர்பான திறனை மேம்படுத்திக்கொள்ளவும் நேரடி ஆதரவை அமெரிக்கா தொடர்ந்து விரிவுபடுத்தும் என்றும் கூறப்பட்டது.
நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர, மியன்மாருக்கான ஐக்கிய நாட்டு நிறுவனச் சிறப்புப் பிரதிநிதி, ஆசியான் உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தினருடன் இணைந்து பணியாற்ற இருதரப்பினரும் உறுதியளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, மியன்மார் நிலவரம் ‘கவலையளிப்பதாகக்’ கூறினார். மியன்மாரில் பொருளியல், சமூக நிலவரம் மேம்பட அண்டை நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மியன்மாரில் ஜனநாயக மாற்றத்தையும் அங்கு நிலவும் நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான வட்டாரத் திட்டத்தையும் சீனா ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.