கரீபியனில் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு

கரீபியனில் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்; நால்வர் உயிரிழப்பு

2 mins read
d5c718e9-789d-49b4-9890-ae5427a5005c
‘போதைப்பொருள் பயங்கரவாதி’களைக் கொன்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: கரீபியனில் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாகச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘போதைப்பொருள் பயங்கரவாதிகள்’ மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இது பார்க்கப்பட்டாலும், இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட படுகொலைகள் என மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்து வருகின்றன.

இது தொடர்பாக அமெரிக்கத் தெற்குப் படைப் பிரிவு தனது அதிகாரபூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட கப்பல் போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது உளவுத்துறைத் தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் நான்கு போதைப்பொருள் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், கொல்லப்பட்டவர்களின் விவரங்களையோ அல்லது தாக்குதல் நடந்த துல்லியமான இடத்தையோ ராணுவம் வெளியிடவில்லை. அக்கப்பல் கரீபியன் கடலில் வழக்கமாக போதைப்பொருள் கடத்தப்படும் பாதையில் சென்றுகொண்டிருந்தது என்ற விவரம் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் வட்டாரங்களில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் இத்தகைய தாக்குதல்களில் இதுவரை 210க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளையில், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவற்றுடன் ஐநா சுயேச்சை வல்லுநர்கள், அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல்கள் சட்டவிரோதமான நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட படுகொலைகள் என்று சாடியுள்ளனர்.

முன்னதாக, வார இறுதியில் கிழக்கு பசிபிக் பகுதியில் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை தெரிவித்திருந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அப்பகுதியில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காகப்பல்தாக்குதல்