வாஷிங்டன்: இந்த மாதத் தொடக்கத்தில் பிரிட்டனின் ‘ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்’ (RAF Lakenheath) ஆகாயத் தளத்தைச் சுற்றிப் பறந்த கிட்டத்தட்ட ஆறு ஆளில்லா வானூர்திகளை அமெரிக்க ராணுவம் தடுத்துநிறுத்தியதாக ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ நாளிதழ் சனிக்கிழமை (நவம்பர் 28) செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் சம்பவத்தில் ஈரானுக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.
அந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாளிதழ் வெளியிட்ட செய்தியில், அந்த வானூர்திகளை முறியடிக்க அமெரிக்கா, ஆளில்லா வானூர்தி எதிர்ப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆளில்லா வானூர்திகளைப் பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
அந்தச் செய்தி குறித்துக் கருத்துக் கேட்டபோது, பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார்.
அதில், “நவம்பர் 13ஆம் தேதி ‘ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்’ தளத்தில் அனுமதியற்ற ஆளில்லா வானூர்திகளின் நடமாட்டம் குறித்த தகவல்களின் தொடர்பில், தற்காப்பு அமைச்சின் காவல்துறையும் ‘சஃபோக்’ காவல்துறையும் அமெரிக்கப் படையினருடன் அணுக்கமாகச் செயல்பட்டன.
“நிலைமை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ‘ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்’ தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழக்கநிலைக்குத் திரும்பின,” என்று அவர் தெரிவித்தார்.
