வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்தின் வானூர்தியை அமெரிக்க ராணுவமே சுட்டுவீழ்த்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரு அமைப்புகளுக்கும் இடையில் போதுமான ஒத்துழைப்பு இல்லாததால் அந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோ எல்லை அருகே, டெக்சஸ் மாநிலத்தின் ஃபோர்ட் ஹான்காக் என்னும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 26) சம்பவம் நிகழ்ந்தது.
அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஆளில்லா வானூர்தி ஈடுபட்டிருந்தபோது ராணுவத்தினர் ஆற்றல் மிகுந்த லேசர் முறையைப் பயன்படுத்தி அதைச் சுட்டு வீழ்த்தியதாக அந்த அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
மெக்சிகோ எல்லை வழியாக போதைப்பொருள் கும்பல்களின் வானூர்திகள் அந்த வட்டாரத்தில் அடிக்கடி பறப்பது வழக்கம். அந்த வானூர்திகளில் ஒன்று என அமெரிக்க ராணுவத்தினர் தவறாகக் கருதி சுட்டது பின்னர் தெரியவந்தது.
சம்பவத்துக்குப் பின்னர் ராணுவம், மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம், சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை ஆகியன இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
அதில், “ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட்டு நிகழ்த்தப்படும் அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்க ராணுவம் என்ன செய்யுமோ அதைபோல தற்போது செய்திருக்கிறது. இருப்பினும், அந்தச் சம்பவம் மக்கள் நடமாட்டப் பகுதியிலிருந்து வெகுதூரத்தில் நிகழ்ந்துள்ளது.
“ராணுவமும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பும் தங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தகவல் தொடர்பையும் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். சரியான ஒத்துழைப்பு இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்கலாம்,” என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

