அமெரிக்கா - மியன்மார் ராணுவ அரசு தோக்கியோவில் பேச்சுவார்த்தை

அமெரிக்கா - மியன்மார் ராணுவ அரசு தோக்கியோவில் பேச்சுவார்த்தை

மியன்மாரின் அரிய கனிம வளங்களைக் குறிவைக்கும் அமெரிக்கா
படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 4:36 pm

2 mins read

வாஷிங்டன்/தோக்கியோ: மியன்மாருடனான உறவுகளை 2021ஆம் ஆண்டுஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு துண்டித்திருந்த அமெரிக்கா, அந்நாட்டு ராணுவ ஆதரவு அரசாங்கத்துடன் கடந்த வாரம் தோக்கியோவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

அமெரிக்க உளவு, ஆய்வுத்துறைத் துணையமைச்சர் மைக்கேல் வான்ஸ் தலைமையில் நடைபெற்ற அச்சந்திப்பில் பத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக செப்டம்பர் மாதம் மியன்மார் தலைநகர் நேப்பிடோவில் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கை வான்ஸ் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

அமெரிக்கர்களைக் குறிவைத்து இயங்கும் மோசடி மையங்களை மூடுவது, அங்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளஅமெரிக்க வர்த்தகரை விடுவிப்பது ஆகிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

எனினும் மின்சார வாகனங்கள், காற்றாலைகளுக்குத் தேவைப்படும் மியன்மாரின் அரிய கனிம வளங்களைப் பெறுவது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இக்கனிமங்கள் நிறைந்துள்ள பகுதிகள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்திய பழங்குடியினக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதும், சீனா, மியன்மார் கனிமங்களின் முக்கிய வாடிக்கையாளராக உள்ளதும் இதில் பெரும் சவால்களாக உள்ளன.

எனினும், கடந்த வாரம் தோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து உடனடியாகத் தெளிவான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அச்சந்திப்பு குறித்து அறிந்த மூவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஓர் அமெரிக்க அதிகாரி உட்பட அந்த மூவரும் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை மீறல்கள், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக மியன்மார்மீது அமெரிக்கத் தடைகள் தொடர்கின்றன. ஆனாலும், மியன்மாருடன் மீண்டும் தூதரக உறவை வளர்க்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மியன்மார் தொழிலதிபரின் மகள் மீதான தடைகளை அமெரிக்கா கடந்த வாரம் நீக்கியது.

பேச்சுவார்த்தைகளுக்கு தோக்கியோவில் இடம் அமைத்துக் கொடுத்த ஜப்பான், மியன்மாருடன் தனது இருதரப்பு மற்றும் பொருளியல் உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மியன்மாரில் தற்போது கிட்டத்தட்ட 300 ஜப்பானிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காமியன்மார்வாஷிங்டன்பேச்சுவார்த்தை