வாஷிங்டன்: அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் சவூதி அரேபியாமீது தாக்குதல் நடத்துவதால், அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அதன் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களால், அவசரமற்ற பணிகளில் உள்ள அமெரிக்க அரசாங்க ஊழியர்களுக்கும் அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் சவூதி அரேபியாவைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் பல வாரங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார். எனவே, பதிலடிக்குத் தயாராக இருப்பதாய்த் தெஹ்ரான் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, அவசரமற்ற பணிகளில் உள்ள ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், அது கட்டாயம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்வது பற்றி மீண்டும் யோசிக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்ற வாரம், சவூதி அராபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதோடு, குவைத்திலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களும் ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களால் சேதமுற்றன.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) ‘அல் கார்ஜ்’ மாநிலத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, இருவர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமுற்றனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில், ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை அடுத்து, பதிலடி கொடுக்கப்போவதாக ஈரான் உறுதிபூண்டுள்ளது.

