டெஹ்ரான்: அமெரிக்கா அளவுக்கதிகமான உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்று டெஹ்ரான் குற்றஞ்சாட்டியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் சனிக்கிழமை (மே 23) தெரிவித்தன.
ஈரான்மீது புதிதாகத் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகவும் ஆக அண்மையில் முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரானியத் தலைவர்கள் பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் ஈரானின் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம மகனின் திருமணத்துக்குப் போகாமல் வாஷிங்டனிலேயே இருக்க முடிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்காக திரு டிரம்ப் தமது திட்டங்களை மாற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனமாகக் கையாளப்படவேண்டிய முக்கியக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரு தரப்புக்கும் இடையே இவ்வாரம் விட்டு விட்டு நடந்த பேச்சுவார்த்தை, தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் நடுநிலையில் இருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி போர்நிறுத்தம் நடப்புக்கு வந்ததிலிருந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையிலிருந்து இதுவரை தற்காலிகத் தீர்வு எட்டப்படவில்லை.
ஈரானுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டு, அதற்கு எதிராக ராணுவ ரீதியாக வலிமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் முன்னுக்குப்பின் முரணான வகையில் அளவுக்கதிகமான உத்தரவாதங்கள் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அப்படியிருந்தும் ஈரான் அரசதந்திர நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஐக்கிய நாட்டு நிறுவன தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசுடன் நடந்த தொலைபேசிவழி உரையாடலின்போது சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சியோஸ், சிபிஎஸ் நியூஸ் போன்ற அமெரிக்க ஊடகங்கள், ஈரான்மீது தாக்குதல் நடத்துவது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவை குறிப்பிட்டன.
தொடர்புடைய செய்திகள்
சமரச முயற்சியைத் தொடரும் பாகிஸ்தான்
இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கில், சமரசப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் ஆசிம் முனீர் வெள்ளிக்கிழமை (மே 22) ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றார்.
அங்கு அவர் சனிக்கிழமை வெளியுறவு அமைச்சர் அராக்சியைச் சந்தித்துப் பேசினார். மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் பேசியதாக ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஒரு வாரத்திற்குமுன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வியும் டெஹ்ரான் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

