வாஷிங்டன்: ஐரோப்பாவில் உள்ள நேட்டோ அமைப்புக்கு வழங்கப்படும் போர் விமானங்களையும் போர்க் கப்பல்களையும் கணிசமாகக் குறைத்துக்கொள்ள அமெரிக்கா திட்டமிடுவதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
மூத்த ஐரோப்பிய அதிகாரிகள் இருவரை மேற்கோள்காட்டி அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
அமெரிக்கா அதன் திட்டத்தை நிறைவேற்றினால் தொலைதூரத் தாக்குதல்களையும் கண்காணிப்பையும் நேட்டோ நாடுகளால் சரிவர மேற்கொள்ள முடியாது என்றது நியூயார்க் டைம்ஸ்.
நேட்டோ நாடுகளுக்கு வழங்கப்படும் எஃப்16, எஃப்15 ரக போர் விமானங்களின் எண்ணிக்கையை 150லிருந்து 100க்கும், கடல்துறை உளவுப் போர் விமானங்களின் எண்ணிக்கையை 26லிருந்து 15க்கும் குறைக்க அமெரிக்கா திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவிற்கு இதற்குமுன் வழங்கிய எரிபொருள் நிரப்பும் எட்டுப் போர் விமானங்களையும் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
ஏவுகணைகளைப் பாய்ச்சும் நீர்மூழ்கிக் கப்பல், போர் விமானங்களைச் சுமந்துசெல்லும் கப்பல், பல்வேறு போர்க் கப்பல்கள், கூடுதலான போர் விமானங்கள் ஆகியவற்றையும் வேறு பணிகளுக்கு அமெரிக்கா மாற்றிவிடக்கூடும்.
நேட்டோ படைக்கு வழங்கப்படும் போர் தொடர்பான உதவிகளைக் குறைத்துக்கொள்ளவிருப்பதாக அமெரிக்காவின் கிழக்குத் தளபத்தியம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் அவற்றின் ராணுவப் பலத்தை வலுப்படுத்திக்கொள்ள போதுமான நிதியைச் செலவிடாமல் இருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதற்குமுன் கூறியிருந்தார்.

