சியேட்டல்: கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் சியேட்டல் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய நாட்டவரான 23 வயது குமாரி ஜானவி கண்டுலா மாண்டுபோனார்.
குமாரி கண்டுலா சியேட்டலில் இருக்கும் நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்தார்.
காவல்துறைக்குச் சொந்தமான கார் ஒன்று அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது அவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த குமாரி கண்டுலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அதன்பிறகு நிகழ்ந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
குமாரி கண்டுலாவின் மரணத்தை எள்ளி நகையாடிய சியேட்டல் நகரக் காவல்துறை அதிகாரியும் அந்நகரின் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு டேனியல் ஓடரர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று குமாரி கண்டுலாவின் மரணம் குறித்து திரு ஓடரர் பரிகாசம் செய்ததை அவரே தமக்குத் தெரியாமல் பதிவு செய்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
குமாரி கண்டுலாவின் உயிருக்கு அதிக மதிப்பில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இது அவரது சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது.
குமாரி கண்டுலா ஒரு சாமானியர் என்று வருணித்த திரு ஓடரர், அவரைத் துளியும் மதிக்காது, அவரது மரணம் குறித்து கொஞ்சம்கூட வருத்தப்படாத வகையில் சிரித்தார்.
திரு ஓடரரின் சொற்களும் செயலும் வெளியே கசிந்தபோது சியேட்டலிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கடும் அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
“ஏற்கெனவே தங்கள் அன்புக்குரியவரை இழந்து தவித்த குமாரி கண்டுலாவின் குடும்பத்தாரின் மனத்தைத் திரு ஓடரரின் செயல் மேலும் காயப்படுத்தியது. மனிதாபிமானமற்ற அவரது செயல் கண்டனத்துக்குரியது. காவல்துறை மீது சமூகத்துக்கு இருக்கும் நம்பிக்கையை அது பாதிப்பதாக அமைந்துள்ளது,” என்று சியேட்டலின் இடைக்கால காவல்துறைத் தலைவர் சூ ரார் கூறினார்.
திரு ஓடரரைப் பணிநீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவு சரியானது என்று சியேட்டல் நகரின் மேயர் புரூஸ் ஹெரல் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து திரு ஓடரரும் அவரது குடும்பத்தாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
ஒருவர் அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொண்டுவிட்டதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, அவ்விடத்தை நோக்கி காவல்துறை அதிகாரியான கெவின் ஏ. டேவ் காவல்துறைக்குச் சொந்தமான காரில் மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அந்தச் சாலையில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதிவேகமாகச் சென்ற அந்த கார் குமாரி கண்டுலா மீது மோதியது.
இதுவே அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தது.
அதிகாரி டேவ் மீது அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.