மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய பைடன்

2 mins read
1c090678-9868-4cbe-82c1-d8a3a5fd14c4
போலி தகவலக் வழங்கியது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை தொடர்பான வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமது மகனான ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாக டிசம்பர் 1ஆம் தேதியன்று அறிவித்தார்.

போலி தகவலக் வழங்கியது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை சார்ந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தமது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதிபர் பைடன் கூறினார்.

“அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து நீதித்துறையின் முடிவில் தலையிடமாட்டேன் என்று தெரிவித்திருந்தேன். சொன்னபடி செய்துள்ளேன். என் மகன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவர் நியாயமற்ற வகையில் நடத்தப்பட்டபோதும் நான் தலையிடவில்லை,” என்று அதிபர் பைடன் அறிக்கை வெளியிட்டார்.

ஹன்டர் பைடனின் சிறைத் தண்டனையை அதிபர் பைடன் குறைக்கமாட்டார் என்றும் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கமாட்டார் என்றும் வெள்ளை மாளிகை இதற்கு முன்பு தெரிவித்திருந்தது.

ஹன்டர் பைடன், போதைப் பித்தராக இருந்தவர் என்றும் அதிலிருந்து அவர் மீண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாகக் கடந்த வாரயிறுதியில் முடிவெடுத்ததாக அதிபர் பைடன் கூறினார்.

அண்மையில் அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருடன் ஹன்டர் பைடன் உட்பட குடும்ப உறுப்பினர்கள், மேசசூசட்ஸ் மாநிலத்தில் தேங்க்ஸ்கிவிங் விடுமுறையைக் கழித்தனர்.

அதையடுத்து, நவம்பர் 30ஆம் தேதி இரவு தலைநகர் வாஷிங்டன் திரும்பினார் ஹன்டர் பைடன்.

“எனக்கு அமெரிக்க நீதித்துறையில் நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து மிகக் கடுமையான மனப்போராட்டத்தால் அவதியுற்றேன். அரசியல் காரணமாக எனது மகனுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எனவே, என் மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்க முடிவெடுத்தேன்,” என்றார் ஜோ பைடன்.

குறிப்புச் சொற்கள்