கைதிகள் இருவர் பற்குச்சியை (toothbrush) பயன்படுத்தி சிறைச்சுவரில் துளையிட்டு, தப்பியோடிய நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள நியூபோர்ட் நியூஸ் சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜான் கர்சா, 37, அர்லி நெமோ, 43, என்ற அவ்விருவரையும் கடந்த திங்கட்கிழமை மாலையிலிருந்து காணவில்லை.
பற்குச்சியையும் ஓர் உலோகத்தையும் கொண்டு அவர்கள் சுவரில் துளையிட்டுத் தப்பியதாகக் காவல்துறை தெரிவித்தது.
கட்டுமானக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் சிறைச்சுவர் கட்டுமானத்தில் உத்தரவாதமற்ற முறுக்குக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை குறிப்பிட்டது.
அக்கம்பிகளைக் கொண்டு கைதிகள் இருவரும் சுவரில் துளையிட்டு வெளியேறி, பின்னர் இன்னொரு சுவர் மீதேறித் தப்பியதாகக் கூறப்பட்டது.
ஆனாலும், சுதந்திரக் காற்றைக் குறுகியே நேரமே அவர்களால் சுவாசிக்க முடிந்தது. மறுநாள் விடிகாலையில் அண்டை நகரமான ஹேம்டனில் உள்ள ஓர் உணவகத்தில் காவல்துறையினர் மீண்டும் அவர்களைக் கைதுசெய்தனர்.
சிறைக் கட்டுமானத்தில் இருந்த குறைபாட்டை அவர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டனர் என்ற விவரத்தைக் காவல்துறை வெளியிடவில்லை.


