வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று மேற்கு ஈராக்கில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை (மார்ச் 12) தெரிவித்தது.
அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் ராணுவம் கூறியது. ஈரானிய தாக்குதல்களைக் கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கேசி-135 வகை விமானம் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருவதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் அறிக்கையொன்றில் தெரிவித்தது.
“’ஆப்பரேஷன் எப்பிக் ஃபியூரி’ நடவடிக்கையின்போது நட்பு நாடுகளின் ஆகாயவெளிப் பகுதியில் சம்பவம் நிகழ்ந்தது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையின் பெயராகும்.
சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு விமானமும் கேசி-135 வகையைச் சேர்ந்ததுதான் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். விழுந்து நொறுங்கிய விமானத்தில் அறுவர் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் ஆதரவில் இயங்கும் ஈராக்கின் இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழு, அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பு விமானத்தை விழச் செய்ததற்குப் பொறுப்பேற்றுள்ளது.

