வாஷிங்டன்: பல பத்தாண்டுகளாக முதலீடுகளைக் கடுமையாகத் தடுத்து வந்த, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு என்ற பட்டியலிலிருந்து சிரியாவை நீக்கப்போவதாக அமெரிக்கா ஜூலை 8ஆம் தேதி அறிவித்தது. இது, அதிபர் அகமது அல்-ஷாரா மீதான புதிய நம்பிக்கை வாக்கெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திடம் முறைப்படி தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைத் தடுக்கும் நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில், இது 45 நாள்களில் நடைமுறைக்கு வரும்.
அரை நூற்றாண்டு காலமாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அசாத் குடும்பம் 2024ல் கவிழ்க்கப்பட்ட பிறகு, தன்னை ஓர் ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக முன்னிறுத்த முயன்று வரும் முன்னாள் போராளியான அல்-ஷாராவை, துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சநிலை மாநாட்டின் இடையே அதிபர் டோனல்ட் டிரம்ப் சந்தித்த வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“சிரியா மக்களுக்கு மகத்துவத்திற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக, அதிபர் டிரம்ப் எடுத்துள்ள மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை இதுவாகும்,” என்று ரூபியோ ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“சிரியா மீதான தடைகளை நீக்குவது அனைத்துலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு வழிவகுக்கும். சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பை வழங்கும். மேலும் சிரியா மக்களுக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும்,” என்று அவர் கூறினார்.
தனது வரலாற்றுப் பகைவர்களில் ஒன்றான சிரியா மீது பலமுறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள இஸ்ரேலுக்கு இருந்த சந்தேகங்களையும் மீறி, டிரம்ப், அல்-ஷாராவை ஆதரித்துள்ளார்.

