ஈரானின் இரு ஏவுகணைத் தளங்களை அமெரிக்கா தாக்கியதாகத் தகவல்

ஈரானின் இரு ஏவுகணைத் தளங்களை அமெரிக்கா தாக்கியதாகத் தகவல்

2 mins read
69c25d17-1a7f-475f-b79a-c55a8a1b6e1b
ஆகஸ்ட் 25ஆம் தேதி டெஹ்ரானில் பெட்ரோலுக்காகக் காத்திருந்த ஓட்டுநர்கள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணைத் தளங்களை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) அமெரிக்கப் படைகள் தாக்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜூலை பிற்பகுதிக்குப் பிறகு ஈரான்மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள்மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஆதாரத்தைக் மேற்கோள் காட்டி ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தியாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளில் பெரும்பாலானவை தடுத்து அழிக்கப்பட்டுவிட்டன என்றும் இதுவரை பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் அந்த செய்தியாளரின் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய ஆரம்பக்கட்டத் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அந்த அமெரிக்க அதிகாரி, “இன்று காலை (ஆகஸ்ட் 30) லராக் தீவில் இருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை பாய்ச்சும் சாதனங்கள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இஸ்லாமிய புரட்சிகரக் காவற்படையினர் ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளுடன் கூடிய ஏவுகணைகளை ஏவத் தயாராவதைக் காண முடிந்தது,” என்றார்.

இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்களில் சிலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, லராக் தீவின்மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் அனைத்துலகக் கடற்பகுதியில் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் வெடிக்கப்பட்டு அல்லது அகற்றப்பட்டுவிட்டதாகவும், புதிய கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் அழிக்கப்படும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகள்மீது கடுமையான பொருளியல் தடைகளை விதிக்கப்போவதாகவும் அமெரிக்கா அச்சுறுத்தியிருந்தது.

இதற்குமுன், ஜூலை பிற்பகுதியில்தான் ஈரான்மீது அமெரிக்கா கடைசியாகத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

பிப்ரவரி 28 அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ முகாம்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் போர் தற்போது ஆறு மாதங்களைக் கடந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களாலும், லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மோதலில் 18 அமெரிக்க ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போரின் காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த மோதலுக்கு முன்பு வரை உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் இந்தப் பாதை வழியாகத்தான் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஈரான்ஆளில்லா வானூர்திதாக்குதல்

தொடர்புடைய செய்திகள்