வாஷிங்டன்: மத்திய கிழக்கில் முழுமூச்சான போரைத் தவிர்க்க ஓயாது பணியாற்றுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் கூறியுள்ளது.
ஈரான் இஸ்ரேலுக்குப் பதிலடி தரும் விதமாகத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கோணத்தில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 5ஆம் தேதி பேச்சு நடத்தியுள்ளதாகக் கூறப்பட்டது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலே காரணம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அதிபர் பைடனும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜோர்தானிய மன்னர் அப்துல்லாவுடன் திரு பைடன் தொலைபேசியில் உரையாடினார். ஏப்ரல் மாதம் ஈரானின் ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த ஜோர்தான் உதவியது நினைவுகூரத்தக்கது.
இவ்வேளையில், திரு பிளிங்கன், கத்தாரையும் எகிப்தையும் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சு நடத்தினார். இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே 10 மாதங்களாக நீடிக்கும் போரில் சண்டை நிறுத்தம் தொடர்பான சமரசப் பேச்சில் இவ்விரு நாடுகளும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
வெள்ளை மாளிகையில் மற்ற உயரதிகாரிகளுடனான சந்திப்பில் பேசிய அமைச்சர் பிளிங்கன், “அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்ற தகவலுடன் தீவிரமான அரசதந்திரப் பணிகளை ஓயாமல் ஆற்றுகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்படுத்துவதன் மூலமாக இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மீண்டும் தொடரும் சச்சரவை முறியடிக்க வேண்டும் என்றார் அவர். முன்னதாக, ஆகஸ்ட் 4ஆம் தேதி ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் ஈராக்கியப் பிரதமருடன் அவர் பேச்சு நடத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
சண்டை நிறுத்தப் பேச்சுகளில் ஈடுபட்ட ஹனியே கொல்லப்பட்டதன் தொடர்பில் இஸ்ரேலிடம் திரு பைடன் தமது சினத்தைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஈரான் விரைவில் பதிலடி தரக்கூடும் என்று எச்சரித்த திரு பிளிங்கன், அதிபர் பைடனின் சண்டை நிறுத்தத் திட்டம்தான் அமைதிக்கான மேம்பட்ட வழி என்று வலியுறுத்தினார்.