ரியாத்: உக்ரேன் போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தத்தை அந்நாடு முன்னரே எட்டியிருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எடுத்துரைத்துள்ளார்.
தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரேன் ஈடுபடுத்தப்படவில்லை. அதுகுறித்து எழந்திருக்கும் ஐயங்கள் தொடர்பில் திரு டிரம்ப் பதிலளித்தார் என்று பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக திரு டிரம்ப்பின் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) அறிவித்தது.
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உக்ரேன் ஈடுபடுத்தப்படவில்லை. இந்தப் போக்கு, முன்னைய அதிபர் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் போக்குடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டதாகும்
திரு பைடனின் அரசாங்கம், அதன் பங்காளி நாடுகளை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைத் தனிமைப்படுத்துமாறு வலியுறுத்தி வந்தது.
நான்கரை மணிநேரம் நீடித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது ரஷ்யா அதன் நிபந்தனைகளை எடுத்துரைத்தது. குறிப்பாக உக்ரேனை நேட்டோ உறுப்பு நாடாக ஏற்றுக்கொள்வதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியது.
செவ்வாய்க்கிழமையன்று பின்னர் பேசிய திரு டிரம்ப், பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாம் கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். இம்மாத இறுதிக்குள் தாம் திரு புட்டினை மீண்டும் சந்திக்கக்கூடும் என்றும் திரு டிரம்ப் தெரிவித்தார்.
அதை கிரெம்ளினும் உறுதிப்படுத்தியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
“ரஷ்யா நடவடிக்கை எடுக்க விரும்புகிறது,” என்று திரு டிரம்ப், பாம் பீச் நகரில் செய்தியாளர்களிடம் சொன்னார்.
பேச்சுவார்த்தையில் உக்ரேன் ஈடுபடுத்தப்பட்டிருக்கவேண்டும் என்று கியவ் வருத்தம் தெரிவித்தது. அந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் திரு டிரம்ப், கியவ் முன்னரே பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
“இந்தப் போரை என்னால் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்,” என்றார் திரு டிரம்ப்.
திரு பைடனின் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்காவின் பங்காளி நாடுகள் ஒன்றுசேர்ந்து பொருளியல் ரீதியாகவும் அரசதந்திர ரீதியாகவும் மாஸ்கோவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கின. இப்போது திரு டிரம்ப்பின்கீழ், ரஷ்யா சம்பந்தப்பட்ட அமெரிக்காவின் போக்கில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிக அபாயங்கள் எழக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
திரு புட்டினுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது உக்ரேன், ஐரோப்பா ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. அதனால் உலகின் அரசியல் சார்ந்த வட்டார நிலவரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்ற கவலை தலைதூக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.