வடகொரியா மீது அமெரிக்கத் தடைகள் அதிகரித்தன

2 mins read
a0eb0007-ed4b-4524-81c0-20bbe93d0469
ராணுவ நடவடிக்கைகள் அற்ற தென்கொரிய எல்லைப் பகுதியில் 2019ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்னைச் சந்தித்து கைகுலுக்கிய காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான மாநாடு பற்றிய தகவல் உறுதியாகாத நிலையில், அந்நாட்டுக்கு அதிக தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

அக்டோபர் 29 முதல் 30 வரை தென்கொரியாவுக்குச் சென்றிருந்த அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபரை சந்திக்க விருப்பம் தெரிவித்தும் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்ய முடியவில்லை. அதோடு அந்த நேரத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டது.

இந்நிலையில் அமெரிக்க நிதி அமைச்சு, கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) வடகொரியாவின் இரண்டு நிதி அமைப்புகளுக்கும் எட்டு வடகொரியர்களுக்கும் தடைகளை அறிவித்தது.

அந்த நிதி அமைப்புகளும் தனிநபர்களும் இணையத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களைக்கொண்டு மோசடி நடந்துள்ளது என்று அறியப்படுகிறது.

“வடகொரிய அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டவர்கள், அந்நாட்டின் அணுஆயுதத் திட்டத்துக்காகத் தகவல் களவு, கள்ளப் பணப் பரிவத்தனை ஆகிய குற்றங்களைப் புரிந்துள்ளனர்,” என்று பயங்கரவாதம், நிதிப் புலனாய்வுத் துறையின் துணைச் செயலாளர் ஜான் ஹர்லி அறிக்கையில் கூறியுள்ளார்.

வடகொரியாவின் இத்தகைய சட்டத்துக்கு எதிரான நிதிவரவு நடவடிக்கைகளை அமெரிக்க நிதித் துறை தொடர்ந்து முறியடிக்கும் என்று அவர் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீன ஊழியர்களைக் கொண்ட வடகொரியாவில் இயங்கும் ‘கொரியா மங்யொங்டெ’ தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வடகொரிய ‘ருஜொங்’ கடன் வங்கி ஆகிய இரு அமைப்புகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நடப்பில் உள்ள தடைகளைத் தவிர்த்து, பணப் பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தின் தடைகளுக்கான ஆலோசனைக் குழுவின் அனுமதியுடன், கூடுதல் தண்டனைகளுக்கு அறைகூவல் விடுக்கப்போவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு நவம்பர் 3ஆம் தேதி குறிப்பிட்டுள்ளதும் கவனத்துக்குரியது.

ஏழு கப்பல்கள் வடகொரியாவிலிருந்து சீனாவுக்கு இரும்பு மற்றும் நிலக்கரியைக் கடத்துவதால் அதனைத் தடைசெய்யக்கோரி அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வர்த்தகத்தின் வழி ஓர் ஆண்டில் 200 மில்லியன் முதல் 400 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வடகொரியாவுக்கு கிடைக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்