வாஷிங்டன்: இஸ்ரேலியத் தற்காப்புக்குத் தான் தெரிவிக்கும் கடப்பாடு இரும்புபோல் உறுதியானது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அதோடு, தனது நட்பு நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தான் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
ஹிஸ்புல்லா பெரிய அளவில் நடத்தும் தாக்குதலைத் தடுக்க, லெபனானில் தாக்குதல்கள் மேற்கொண்டதாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கருத்து வந்துள்ளது.
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யொவவ் காலண்டுடன் பேசினார்.
ஈரான் ஆதரவுள்ள லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலின் தற்காப்பு குறித்துப் பேசியதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பேட் ரைடர் கூறினார்.
“ஈரான் அல்லது அதன் வட்டாரப் பங்காளிகள் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலின் தற்காப்புக்கு அமெரிக்கா காட்டும் உறுதியான கடப்பாட்டை அமைச்சர் ஆஸ்டின் மறுவுறுதிப்படுத்தினார்,” என்று திரு ரைடர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இஸ்ரேலின் தற்காப்புக்கு ஆதரவு காட்டும் நிலையில் இருப்பதை அமெரிக்கா மிகத் தெளிவாகத் தெரிவித்திருப்பதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இஸ்ரேல் முழுதும் காலை 6 மணியிலிருந்து (சிங்கப்பூர் நேரப்படி, முற்பகல் 11 மணி) 48 மணி நேர அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு காலண்ட், நிலைமை குறித்து திரு ஆஸ்டினுக்கு விளக்கம் அளித்திருப்பதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சு கூறியது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் உத்தரவில், அமெரிக்க மூத்த அதிகாரிகள் தொடர்ந்து இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஷான் சேவட் கூறியுள்ளார்.
திரு பைடன் இஸ்ரேலிலும் லெபனானிலும் உள்ள நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் சொன்னார்.