இந்த உயர்நிலைப்பள்ளியில் ஒன்றரை ஆண்டாக விளக்குகள் அணையவே இல்லை

இந்த உயர்நிலைப்பள்ளியில் ஒன்றரை ஆண்டாக விளக்குகள் அணையவே இல்லை

2 mins read
c6716ba1-85b7-4be9-ba06-1d222038266c
மசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள மினிஷாக் உயர்நிலைப் பள்ளியில் விளக்குகளை எவராலும் அணைக்க முடியவில்லை. படம்: mrhs.hwrsd.org -

அமெரிக்காவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில், தொடர்ந்து ஒன்றரை ஆண்டிற்கும் மேலாக 7,000 விளக்குகளும் இரவு பகலாக அணையாமல் ஒளி விட்டுக்கொண்டிருக்கின்றன. அவற்றை எவராலும் அணைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

2021 ஆகஸ்ட் மாதம் கணினிக் கோளாறு ஏற்பட்டதிலிருந்து, மசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள அந்த உயர்நிலைப் பள்ளியில் விளக்குகளை எவராலும் அணைக்க முடியவில்லை.

2012ல் அப்பள்ளியில் புதிய கணினி அமைப்புமுறையை நிறுவிய நிறுவனம், பலமுறை கைமாறியது. இதனால், முக்கிய கணினி கட்டமைப்பை சரிசெய்ய முடியாததால் பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தடங்கல் ஏற்பட்டது என்று பள்ளியின் மாணவர் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய விநியோகத் தொடரில் ஏற்பட்ட சிக்கல்கள், கணினிக் கட்டமைப்புக்குத் தேவையான பாகங்களைப் பெறுவதற்கான முயற்சியை தாமதப்படுத்தியது.

"வரி செலுத்துவோருக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிகிறோம். இந்தச் சிக்கலை தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்," என்று மாவட்ட பள்ளி நிதி உதவி கண்காணிப்பாளர் ஏரன் ஓஸ்போர்ன் என்பிசி நியூஸ் செய்தித்தளத்திடம் கூறினார்.

மின்சார விநியோகம் விரயமாவதைக் குறைக்க, சில வகுப்பறைகளில் உள்ள விளக்குகளை ஆசிரியர்கள் அகற்றியுள்ளதாக என்பிசி குறிப்பிட்டது.

பழுதுபார்ப்புப் பணிகளுக்குத் தேவையான மாற்று பாகங்கள் ஒருவேளையாக வந்துவிட்டதால், மென்பொருளை மாற்றியமைக்கும் பணி அடுத்த மாதத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், விளக்குகளை அணைத்தால் அதிக விலை கொடுக்க வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மின்கட்டமைப்பு சேவை மற்றும் விளக்குகளை மாற்றுவதற்கு US$75,000 முதல் US$80,000 வரை செலவாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.