அரசாங்க முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க செனட் சபை மசோதா நிறைவேற்றம்

2 mins read
60a41173-b222-4b8f-85af-d90dc1b6bec8
முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் மசோதாவை ஆதரித்து 60 விழுக்காடு செனட்டர்கள் வாக்களித்தனர். - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் ஆக நீண்டகாலமாக நடப்பில் இருக்கும் அரசாங்க முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு செனட் சபை திங்கட்கிழமை (நவம்பர் 10) மசோதாவை நிறைவேற்றியது.

இது தொடர்பான உடன்பாட்டுக்கு அது ஒப்புதல் தெரிவித்தது.

அரசாங்க முடக்கநிலை காரணமாக மில்லியன் கணக்கானோரின் உணவு தொடர்பான சலுகைகள் தடைபட்டன. அதுமட்டுமல்லாது, நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் மசோதாவை ஆதரித்து 60 விழுக்காடு செனட்டர்கள் வாக்களித்தனர்.

40 விழுக்காட்டினர் அதை எதிர்த்தனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து செனட்டர்களும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எட்டு செனட்டர்களும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர்.

சுகாதார மானியங்களை அரசாங்க நிதியுடன் இணைக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

சுகாதார மானியங்கள் இவ்வாண்டு இறுதியில் காலாவதி ஆகின்றன.

இந்த மானியங்கள் தொடர்பாக டிசம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மானியங்களால் 24 மில்லியன் அமெரிக்கர்கள் பலனடைகின்றனர்.

ஆனால், வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் மானியங்கள் தொடரும் என்ற உத்தரவாதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அரசாங்க அமைப்புகளுக்கான நிதி வழங்குதல் அக்டோபர் 1ஆம் தேதியுடன் காலாவதியானது.

தற்போதைய உடன்பாடு அவற்றுக்கான நிதி வழங்குதலை மீண்டும் தொடங்கிவைக்கும்.

இதன் காரணமாக அரசாங்க ஊழியரணியைச் சுருக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இது தடையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி வரை ஆட்குறைப்புகள் தடுக்கப்படும்.

நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக அடுத்து குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

அங்கு அந்த மசோதாவை புதன்கிழமைக்குள் (நவம்பர் 12) நிறைவேற்ற விரும்புவதாக சபா நாயகர் மைக் ஜான்சன் தெரிவித்தார்.

அதையடுத்து, அதிபர் டிரம்ப்பின் கையொப்பத்தைப் பெற்று அதைச் சட்டமாக்க அவர் இலக்கு கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்