வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் ஆகாயத் தற்காப்பை வலுப்படுத்த அமெரிக்கா வழக்கத்துக்கு மாறாக, ‘தாட்’ என்ற ஏவுகணை எதிர்ப்புக் கருவியை இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளது. அத்துடன், அதன் படைகளையும் அங்கு அனுப்பப்போவதாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) கூறியது.
இஸ்ரேலைத் தற்காக்கவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது அக்டோபர் 1ஆம் தேதியன்று ஈரான் 180க்கும் மேலான ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானுக்கு பதிலடி தர இஸ்ரேல் தயாராகி வருவது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் விரிவான போரைத் தடுக்க எண்ணம் கொண்டுள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ள உள்ள தாக்குதலை ஒரு வரம்புக்குள் வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக அதன் அணு உலைகள், எரிசக்தி கட்டமைப்பைக் குறிவைப்பதைத் தான் எதிர்ப்பதாக திரு ஜோ பைடன் இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து கருத்துரைத்த அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், ஈரானிடமிருந்தும் ஈரானிய ஆதரவு அமைப்புகளிடமிருந்தும் வரும் தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்க மேற்கொண்டுவரும் விரிவான ராணுவ முறைப்படுத்தும் நடவடிக்கை என்று கூறினார்.
எனினும், இஸ்ரேலிடமே ராணுவ வல்லமை இருப்பதால், அங்கு, பயிற்சிகளைத் தவிர, அமெரிக்கா வீரர்களை அனுப்புவது அரிதான நிகழ்வு என்று கூறப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் அண்மைய மாதங்களில் செயல்பட்டுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதல் நடத்திய அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போர்க்கப்பல்களிலிருந்தும் போர் விமானங்களிலிருந்தும் இஸ்ரேலைத் தற்காக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
அப்பொழுதெல்லாம் அவை இஸ்ரேலுக்கு அப்பாலிலிருந்து செயல்பட்டு வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.