பி-52 போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பும் அமெரிக்கா

பி-52 போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பும் அமெரிக்கா

2 mins read
5b444522-a2ef-42a1-be64-d536a50c66aa
ஈரானுக்குப் புறப்படும் அமெரிக்காவின் பி-52 வகை போர் விமானம் ஒன்று. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரானின் ஆகாயவெளியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் அதன் காரணமாகப் போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக ஈரானிய ஆகாயவெளிப் பகுதிகளில் பி-52 போர் விமானங்களைத் தாங்கள் அனுப்பியிருப்பதாகவும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) செய்தியாளர்களிடம் கூறினார்.

எனினும், அண்டை நாடுகள் மீது ஏவுகணைகள், வானூர்திகளைப் பாய்ச்சி பதில் தாக்குதல் நடத்தும் ஆற்றல் ஈரானிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுக் கட்டடத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“அவர்கள் சில ஏவுகணைகளைப் பாய்ச்சுவர், நாங்கள் அவற்றைச் சுட்டு வீழ்த்துவோம்,” என்று திரு ஹெக்செத் கூறினார். அமெரிக்க முப்படைத் தளபதிகள் குழுத் தலைவர் டேன் கெய்னுடன் சேர்ந்து திரு ஹெக்செத் பேசினார்.

அமெரிக்கா போரில் வெல்லும் வாய்ப்பு இதுவரை இல்லாத அளவு அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார். எனினும், போர் எப்போது நிறைவடையக்கூடும் என்பது குறித்து அவர் தகவல் வெளியிடவில்லை. அது, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பையும் அவருக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையையும் பொறுத்தது என்று திரு ஹெக்செத் சுட்டினார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் தொடர்பிலான பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய திரு ஹெக்செத், “அது (பேச்சுவார்த்தை) உண்மையானது, தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது; மேலும் வலுப் பெறுகிறது என்றும் நான் நினைக்கிறேன்,” என்று விளக்கமளித்தார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுவதை ஈரான் மறுத்து வந்துள்ளது. அமெரிக்கா முன்வைத்த, 15 அம்சங்களைக் கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரான் பதிலளிக்கவில்லை என்றும் தாங்கள் ஒப்பந்தம் எதையும் முன்வைக்கவில்லை என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) கூறினார்.

ஒரு மாதமாகத் தொடரும் ஈரான் போரினால் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பங்கு விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்