வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கத்தின் கப்பல்கள் பனாமா கால்வாயை இலவசமாக பயன்படுத்த முடியாது என்று பனாமா கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பனாமா கால்வாயை அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அது பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பனாமா கால்வாயை இலவசமாகப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதனால் ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் மிச்சமாகும் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், அதை மறுக்கும் விதமாக தற்போது பனாமா அறிக்கை வெளியிட்டுள்ளது.
பனாமா கால்வாயைப் பயன்படுத்தும் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. கப்பல்கள் கட்டணங்களைச் செலுத்தவேண்டும் என்று அமெரிக்காவுக்கு பனாமா நேரடியாகப் பதிலளித்துள்ளது.
மேலும் அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து பேசவும் பனாமா விருப்பம் தெரிவித்துள்ளது.
பனாமா கால்வாய் உலகின் ஆக பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்று. அதில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் வந்து செல்கின்றன.
பனாமா கால்வாய் வழி செல்லும் கப்பல்களிடம் பனாமா அதிக கட்டணம் வசூலிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியும் வருகிறது.