6,000 மாணவர்களின் விசாவை ரத்து செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சு

1 mins read
edab5775-a1ff-482b-a29b-4aec0373a1b7
விசா ரத்து செய்யப்பட்டோரில் பலர் தாக்குதல்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டியது, வீடு புகுந்து கொள்ளையடித்தல், பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சு 6,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது.

விதிமீறல்கள், அனுமதிக்கப்பட்ட காலகட்டம் கடந்தும் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியது ஆகியவை காரணம் காட்டப்பட்டது.

இத்தகவலை பிபிசி செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

விசா ரத்து செய்யப்பட்டோரில் பலர் தாக்குதல்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டியது, வீடு புகுந்து கொள்ளையடித்தல், பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடியேறிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்கியதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டபோது அதுகுறித்து துல்லியமான தகவல்களை வெளியிடவில்லை.

ஆனால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய சிலர் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் யூதர்களுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

விசா ரத்து செய்யப்பட்ட 6,000 வெளிநாட்டு மாணவர்களில் ஏறத்தாழ 4,000 பேர் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அது தெரிவித்தது.

கிட்டத்தட்ட 300 பேர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தொடர்கின்றபோதிலும் அவற்றை அது எளிதில் வழங்குவதில்லை.

விசா தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயில விண்ணப்பம் செய்தததை நினைத்து வருந்துவதாக வெளிநாட்டு மாணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்