‘ஓப்பன்ஏஐ’மீது வழக்கு பதிவுசெய்த அமெரிக்க மாநிலங்கள்

‘ஓப்பன்ஏஐ’மீது வழக்கு பதிவுசெய்த அமெரிக்க மாநிலங்கள்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Oct 2026 - 12:21 pm

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் எட்டு மாநிலங்களில் உள்ள இருகட்சிக் குழுக்கள், சேட்ஜிபிடியால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட தீங்கு தொடர்பில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின்மீது வழக்கு தொடுப்பதாகத் தெரிவித்துள்ளன.

இளையர்கள் உள்ளிட்ட பயனீட்டாளர்கள் தங்களுக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்க சேட்ஜிபிடி கற்பித்ததாக அவை கூறின.

பயனீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறும் அளவிற்கு சேட்ஜிபிடி வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஐயோவா, கன்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் சட்ட அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளை, தவறான நம்பிக்கைகளுக்கு வலுவூட்டி அபாயகரமான நடத்தையை ஊக்குவிக்கும் அது, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறையைத் திட்டமிட பயனீட்டாளர்களுக்கு உதவுவதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஓப்பன்ஏஐ நிறுவனம், பொதுமக்களுக்கு அதன் பங்குகளை முதன்முறையாக வழங்கத் தயாராகிவரும் வேளையில் தற்போதைய வழக்கு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.

ஃபுளோரிடாவின் தலைமைச் சட்ட அதிகாரி இவ்வாண்டு ஜூன் மாதம் நிறுவனம்மீது மாநில அளவிலான முதல் வழக்கைப் பதிவுசெய்தார்.

சேட்ஜிபிடி தளத்தின் பாதுகாப்பு குறித்துப் பயனீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதன் வழி மாநிலப் பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியிருப்பதாக நிறுவனம் குறித்துக் குறைகூறப்பட்டது.

குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததன் மூலம் பொதுமக்களுக்கு நிறுவனம் தொல்லை தந்ததாகவும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

அதை முன்னிட்டு சேட்ஜிபிடி செயல்படும் முறைகளில் மாற்றங்கள் செய்யும்படி ஓப்பன்ஏஐ நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி அந்த வழக்குப் பதிவில் கோரப்பட்டது.

இவற்றுக்கு இடையே, தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்ளக்கூடிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதிலிருந்து ஓப்பன்ஏஐ நிறுவனத்தைத் தடை செய்யும்படி மாநிலங்கள் கோருகின்றன.

மனிதர்களின் பண்புகளுக்கு ஏற்ப அந்த மாதிரிகள் இல்லாவிட்டால் அவற்றைத் தயாரிக்கவேண்டாம் என்று அவை கேட்டுக்கொண்டன.

ஆர்கன்சஸ், ஐடஹோ, மாண்டேனா, நெபிராஸ்கா, வெஸ்ட் வர்ஜினியா ஆகியவை மாநிலச் சட்டத்தை மீறியதற்காகவும் சேதங்களை விளைவித்ததற்காகவும் ஓப்பன்ஏஐக்கு அபராதம் விதிக்கப்படும்படியும் கூறின.

குறிப்புச் சொற்கள்
ஓப்பன்ஏஐவழக்குஅமெரிக்காமாநிலம்