மத்திய கிழக்கில் ராணுவத்தை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்

மத்திய கிழக்கில் ராணுவத்தை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்

2 mins read
போரை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல டிரம்ப் திட்டம்
441ad125-e886-493b-b198-ddf60899903f
மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதன் மூலம் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தும் விதமாக அதிக அளவில் படைகளைக் குவிக்க அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது.

ராணுவப் படைகளை அதிகரிப்பதால் திரு டிரம்ப்பிற்குப் போரில் கூடுதலான வாய்ப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது இணைந்து நடத்தும் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இது உலக அளவில் பெரிய பொருளியல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதன் மூலம் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

கப்பல்களின் பாதுகாப்புக்கு வான்வழியாகவும் கடல் வழியாகவும் பாதுகாப்பு வழங்க முடியும் என்று விவரம் அறிந்த அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைகளிலும் இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கார்க் தீவுக்குள் நுழைய அமெரிக்கா திட்டம்

அமெரிக்க ராணுவ வீரர்களைத் தரை வழியாக ஈரானின் கார்க் தீவுக்குள் அனுப்பவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் கார்க் தீவில் நுழைவது சற்று ஆபத்தான ஒன்று என்றும் ஈரான் ஆயுதங்கள் மூலம் அங்குத் தாக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

இம்மாதம் (மார்ச்) 13ஆம் தேதி அமெரிக்கா கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவத் தளங்களைத் தாக்கியது. தீவில் உள்ள எண்ணெய்க் கட்டமைப்புகளை அழிக்கப்போவதாகத் திரு டிரம்ப் ஈரானுக்கு மிரட்டலும் விடுத்தார்.

ஈரானின் பொருளியலுக்குக் கார்க் தீவு மிக முக்கியமானது என்பதால் அதை அமெரிக்கா அழிப்பதற்குப் பதிலாகக் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தரைவழித் தாக்குதல் நடத்துவது எளிதானது அல்ல என்பதால் திரு டிரம்ப் பலரை ஆலோசிக்கக்கூடும் என்றும் தவறான முடிவு எடுக்கப்பட்டால் அதிபர் டிரம்ப்பின் அரசியலுக்கு அது நெருக்கடி தரக்கூடும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்