வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறந்துவிட்டால் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற இயலுமா, அது தொடர்பில் அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த உரிமை உள்ளதா என்பது பற்றிய முக்கிய வழக்கை விசாரிப்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே அதிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பித்த முக்கிய உத்தரவு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்தவர்களின் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தது என்பது நினைவுகூரத்தக்கது.
எனினும், இதுதொடர்பாகப் பலதரப்பினர் நீதிமன்றங்களை நாட இந்த முடிவு நடைமுறைக்கு வராமல் போனது.
இந்நிலையில்தான் இவ்விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையைக் கையிலெடுப்பதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை நடைபெறும் தேதி உள்ளிட்ட பிற தகவல்கள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று உள்ளூர் ஊடகச் செய்திக் குறிப்புகள் கூறின.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வர பல காலம் எடுக்கும் என்றாலும், அமெரிக்க குடியுரிமை சார்ந்த இவ்வழக்கு அமெரிக்காவில் வசித்துவரும் எண்ணற்ற புலம்பெயர்ந்தோரின் அக்கறைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
ஏறக்குறைய 160 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது திருத்தம், அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

