வாஷிங்டன்: சமூக ஊடகச் செயலிகளில் அவை இளையர்கள், குறிப்பாக இளமைப் பருவத்தில் அடியெடுத்து வைத்துள்ள சிறுவர்களுக்குத் தீங்கு விளைவித்ததாக எச்சரிக்கைக் குறிப்பைச் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், எச்சரிக்கைக் குறிப்பு மட்டுமே சமூக ஊடகங்களை இளையர்க்குப் பாதுகாப்பானதாக ஆக்கிவிடாது என்றாலும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தவும் அது உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். புகையிலை தொடர்பான ஆய்வுகளை அவர் சுட்டினார்.
அத்தகைய எச்சரிக்கைக் குறிப்பைக் கட்டாயமாக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.
இளையர்களைப் பாதிக்கும் விவகாரங்களில் கவனம் செலுத்தும் ஆர்வலர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீண்டகாலமாகவே ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், டிக்டாக், ஸ்னேப்சேட் போன்ற சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் குறைகூறிவந்துள்ளனர்.
ஏதாவதொரு நடவடிக்கையில் கவனம் செலுத்தும் நேரம் குறைதல், எளிதில் இணையத் துன்புறுத்தலுக்கு ஆளாதல் போன்றவை இத்தகைய தீங்குகளில் அடங்கும்.
“சமூக ஊடகங்களால் இளம் பருவத்தினரின் மனநலத்திற்குக் குறிப்பிடத்தக்க தீங்கு விளையக்கூடும் என்ற தலைமை மருத்துவரின் எச்சரிக்கைக் குறிப்பை சமூக ஊடகங்களில் இடம்பெறச் செய்வதற்கான நேரம் இது,” என்று டாக்டர் மூர்த்தி திங்கட்கிழமை (ஜூன் 17) தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
டிக்டாக், ஸ்னேப், மெட்டா தளங்கள் (ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம்) ஆகியவை இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
இந்த மூன்று நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் எக்ஸ் தளம், ‘டிஸ்கார்ட்’ செயலி ஆகிய தளங்களின் அதிகாரிகளிடம் ஜனவரி மாதம் அமெரிக்க செனட்டர்கள் விசாரணை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
சிறு குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு குறித்த இவ்விசாரணையின்போது, இளம் பயனாளர்களைப் பாலியல் துன்புறுத்தல்காரர்களிடமிருந்து பாதுக்காக்கத் தவறிவிட்டதாகவும் இந்நிறுவனங்களின் அதிகாரிகளுடைய கரங்கள் ரத்தக் கறை படிந்தவை என்றும் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்ஸே கிரஹம் சாடினார்.
சமூக ஊடகங்களால் ஏற்படும் மனவுளைச்சல், மனஅழுத்தம் போன்ற மனநலப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தை இயற்றுவதன் தொடர்பில் அமெரிக்க மாநிலங்கள் சில பணியாற்றி வருகின்றன.

