அமெரிக்க வரிவிதிப்பு உள்ளூர் வர்த்தகங்களைப் பாதிக்காது: அன்வார்

அமெரிக்க வரிவிதிப்பு உள்ளூர் வர்த்தகங்களைப் பாதிக்காது: அன்வார்

2 mins read
3ee1b096-1165-4491-99e5-71616178efd8
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுகிறார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: அமெரிக்க வரிவிதிப்பு மலேசியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை இதுவரை பாதித்துள்ளது, உள்ளூர் வர்த்தகங்களை அல்ல என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வாங்கும் அல்லது வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்மீது மட்டுமே வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதுவரை, வரிவிதிப்பினால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறைவு என்றார் அவர்.

முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சு வழங்கிய தகவல்படி, திங்கட்கிழமை (பிப்ரவரி 23) நிலவரப்படி, எந்தவோர் உள்ளூர் நிறுவனங்களும் பாதிக்கப்படவில்லை என்று திரு அன்வார் கூறினார்.

“இங்கு வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் முதலீடு செய்யவேண்டும் என்பது டிரம்ப்பின் உத்தி என்பதால்தான், வரிவிதிப்பு அந்த நிறுவனங்களுக்கானது என்று நான் சொல்கிறேன்,” என திரு அன்வார் தெரிவித்தார்.

அதோடு, மலேசியாவின் வர்த்தக நலனைப் பாதிக்கக்கூடிய அவசரமான முடிவுகளை அரசாங்கம் தவிர்த்துவிடும் என்றும் அவர் கூறினார்.

அவ்விவகாரத்தை அமைச்சு அணுக்கமாக மறுஆய்வு செய்வதாக திரு அன்வார் சொன்னார். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், அதன் அமெரிக்கப் பங்காளிகளிடமிருந்து முழுமையான தகவல்களை அமைச்சு பெறும் என்றும் அவர் கூறினார்.

நிலைமையைத் தீவிரமாக ஆராய, அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை கூடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு அன்வார் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப்பின் வர்த்தக வரிவிதிப்பை நிராகரித்தது. அது, அவரது பொருளியல் கொள்கைக்குப் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான அண்மைய சட்ட, கொள்கை மேம்பாடுகளை மலேசியா கவனமாக ஆராய்வதாக முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி சனிக்கிழமை கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
அன்வார் இப்ராகிம்வர்த்தகம்வரி