அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளின் உணவுப் பொருள்மீது அமெரிக்க வரிகள் குறையும்

2 mins read
29fbcbd1-42ee-4a5d-98f6-91c5802dd437
அர்ஜென்டினா, எக்குவடோர், குவாட்டமாலா, எல் சால்வடோர் ஆகிய நாடுகளின் சில உணவுப் பொருள்கள்மீதும் பிற இறக்குமதிகள்மீதும் உள்ள வரிகளை நீக்கியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா, புதிய கட்டமைப்பு உடன்பாட்டின்கீழ் அர்ஜென்டினா, எக்குவடோர், குவாட்டமாலா, எல் சால்வடோர் ஆகிய நாடுகளின் சில உணவுப் பொருள்கள்மீதும் பிற இறக்குமதிகள்மீதும் உள்ள வரிகளை நீக்கியுள்ளது.

அந்த உடன்பாட்டின்வழி அர்ஜென்டினா, எக்குவடோர், குவாட்டமாலா, எல் சால்வடோர் நாடுகளின் சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்கள் இன்னும் எளிதாகக் கால் பதிக்க முடியும்.

அமெரிக்கா செய்துகொண்ட உடன்பாடு வழி காப்பி, வாழைப்பழம் போன்ற உணவுப் பொருள்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டிறுதிக்குள் அமெரிக்காவுக்கும் இதர நான்கு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடு உறுதிப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கர்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் நோக்கில் காப்பி, வாழைப்பழம், பிற பழங்கள் ஆகியவற்றின் விலையைக் குறைக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முயல்வதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸண்ட் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரேசில் வெளியுறவு அமைச்சர் மோரோ வியெரா ஆகியோர் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு குறித்த உடன்பாடு பற்றி இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உலகில் அதிகளவில் காப்பியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது பிரேசில். ஆனால் பிரேசிலிய ஏற்றுமதிகள் திரு டிரம்ப்பின் 50 விழுக்காட்டு வரியை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், அர்ஜெண்டினா, எல் சால்வடோர், குவாட்டமாலா, எக்குவடோர் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடனான உடன்பாட்டை வரவேற்றன.

அந்த உடன்பாடு மூலம் நான்கு நாடுகளின் பெரும்பாலான பொருள்கள்மீதான வரிகள் 10 விழுக்காடாக நீடிக்கும்.

அர்ஜெண்டினாவில் உள்ள அமெரிக்காவின் முதலீட்டைப் புதிய உடன்பாடு வலுப்படுத்தும் என்று நம்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பாப்லோ குவிர்னோ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்