ஈரான்மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா

ஈரான்மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா

2 mins read
7342e00b-6763-424b-a977-4ffb66beec82
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் உல்லாசத் தளத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில் திரு வேன்ஸ் செய்தியாளர்களிடம் உரையாற்றினார். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: ஈரானின் எண்ணெய்மீதான தடைகளை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா திங்கட்கிழமை (ஜூன் 22) அறிவித்துள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அணுவாயுதச் சோதனையாளர்கள் நாடு திரும்ப ஈரான் அனுமதிப்பதாக அமெரிக்கத் துணையதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறியதை அடுத்து தடைகள் நிறுத்தப்பட்டன.

“வெற்றிகரமான இறுதி உடன்பாட்டை எட்ட உறுதியான அடித்தளமிட்டோம்,” என்றார் திரு வேன்ஸ்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் ஈரானுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் உல்லாசத் தளத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில் திரு வேன்ஸ் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

“அணுவாயுத விவகாரம் குறித்து சுருக்கமான கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவில்லை,” என்றார் ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பக்காய்.

ஈரான்மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்குவதாக அமெரிக்க நிதியமைச்சு அறிவித்தது. அதன் மூலம், இவ்வாண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை ஈரானால், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து, விற்கவும் விநியோகம் செய்யவும் முடியும்.

இதற்கிடையே, வா‌ஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய்யைக் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படும் அதிக முக்கியம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை இப்பொழுது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

போர் தொடங்கியபோது ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் அனைத்துலக நாடுகளின் பொருளியல் பலத்த அடி வாங்கியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“நாம் இன்னும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம். இப்போதைக்கு நமக்கு இரண்டு விவகாரங்கள் உறுதியாகிவிட்டன. ஒன்று, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளது. மற்றொன்று அணுவாயுதம் இல்லாத நாட்டைக் கொண்டிருக்கிறோம்,” என்று திரு டிரம்ப் கூறினார்.

ஏறக்குறைய 40 நாள்களுக்கு நீடித்த சண்டைக்குப் பிறகு சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடித்தளம் போடும் விதமாக ஈரானும் அமெரிக்காவும் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அந்தப் பேச்சுவார்த்தை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடரும் சர்ச்சைக்குரிய விவகாரங்களைச் சமாளிக்க முற்பட்டது. ஈரானின் அணுவாயுதத் திட்டம் போன்றவை அவற்றுள் அடங்கும்.

“நாம் இன்னும் ‘வீட்டை’ கட்டவில்லை என்றபோதும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் வெற்றிகரமான அடித்தளத்தைப் போட்டிருக்கிறோம்,” என்று திரு வேன்ஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஈரான்தடை