தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$78 மில்லியன் ஹார்வர்ட் மானியங்களை ரத்து செய்த அமெரிக்கா

2 mins read
2fab4c7a-054a-46c5-83b1-67129fb44407
அண்மைய வாரங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட இருந்த கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள மானியங்களை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் முடக்கியுள்ளது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: ஹார்வர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் யூதர்களுக்கு எதிராகத் தொல்லை விளைவித்தல், இனப் பாகுபாடு ஆகியற்றை எதிர்கொள்ளத் தவறியதால் அப்பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட இருந்த 60 மில்லியன் அமெரிக்க டாலர் ($77.7 மில்லியன்) பெறுமானமுள்ள மானியங்களை ரத்து செய்வதாக அமெரிக்க சுகாதார, மனிதவளச் சேவை தெரிவித்துள்ளது.

அண்மைய வாரங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட இருந்த கிட்டத்தட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள மானியங்களை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் முடக்கியுள்ளது.

அமெரிக்கக் கல்விக் கழகங்களில் அமெரிக்காவுக்கு எதிரான இடதுசாரி சித்தாந்தங்கள் பேரளவில் பரவி வருவதாக அதிபர் டிரம்ப் குறைகூறியுள்ளார்.

மாணவர் விண்ணப்பத்தைப் பரிசீலணை செய்யும்போது இனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் யூதர்களுக்கு எதிராகப் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாகவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

2024ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை அது சுட்டியது.

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகமும் யூதர்களுக்கு எதிராகப் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குறைகூறப்பட்டுள்ளது.

“யூதர்களுக்கு எதிராகத் தொல்லை விளைவித்தல், இனப் பாகுபாடு ஆகியவற்றை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் எதிர்கொள்ளத் தவறிவிட்டது. எனவே, அதற்கு வழங்கப்பட இருந்த மானியங்கள் ரத்து செய்யப்படுகின்றன,” என்று அமெரிக்க சுகாதாரத்துறை, திங்கட்கிழமை (மே 20) எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

மானியங்கள் வழங்கப்படாததால் ஏற்பட இருக்கும் செலவுகளைச் சமாளிக்க முடியாது என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாற்று நிதி பெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அது கூறியது.

மானியங்களை ரத்து செய்ய அமெரிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதால் அதற்கு எதிராக அதிருப்திக் குரல் எழுப்பி வழக்கு தொடுத்துள்ளது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.

குறிப்புச் சொற்கள்