வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்க அல் காய்தா குழு அழைப்புவிடுப்பதாகப் பயங்கரவாதத் தடுப்புக்கான தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.
அக்குழு தொடர்ந்து அமெரிக்காவுக்கு மிரட்டலாய் விளங்குவதை அது காட்டுவதாக வாஷிங்டன் சொன்னது.
உலகில் சண்டை நடக்கும் இடங்களில், குறிப்பாக அமெரிக்க ஆதரவு அல்லது ராணுவ ஈடுபாடு இருக்கும் வட்டாரங்களில், அல் காய்தாவும் ஏமனில் உள்ள அதன் அமைப்பும் ஊடகங்களின் மூலம் உத்தேசத் தாக்குதல்கார்களைத் தூண்டிவிடக்கூடும் என்று அமெரிக்க நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
தாங்கள் கண்காணிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசாங்க அதிகாரிகளை அது கேட்டுக்கொண்டது. பயணத் திட்டங்கள், நிகழ்ச்சி அட்டவணைகள், இடங்கள்பற்றி வெளிப்படையாக எந்த விவரங்களையும் அவர்கள் பதிவிட வேண்டாம் என்றும் பணியில் இல்லாத நேரங்களில் சின்னங்கள் உட்பட மற்ற அடையாளப் பொருள்களை அகற்றிவிட வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியது.
பெரிய கூட்டம் சேரும் விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள் போன்றவை குறிவைக்கப்படக்கூடும் என்றும் அது எச்சரித்தது. அத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே விளக்கமளிக்குமாறும் அறிக்கை கேட்டுக்கொண்டது.
அல்-காய்தாவை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா குறிப்பிடுகிறது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் அந்தக் குழு நடத்திய தாக்குதல்களில் ஏறக்குறைய 3,000 பேர் கொல்லப்பட்டனர்.


