வாஷிங்டன்: ஈரானைப் பொருளியல்ரீதியாக மேலும் தனிப்படுப்படுத்தி அந்நாட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்பில் தங்கள் பக்கம் நிற்குமாறு அமெரிக்கா, அதன் பங்காளி நாடுகளுக்கும் சீனாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.
டெஹ்ரானுக்கு ராணுவரீதியாக நெருக்குதல் அளிப்பதற்குப் பதிலாக பொருளியல்ரீதியாக நடவடிக்கை எடுக்கத் திரு டிரம்ப் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அவரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைத் திரு பெசன்ட்டின் எச்சரிக்கை வெளிக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.
போரின் தாக்கத்தாலும் எதிர்வரும் இடைத்தவணைத் தேர்தலினாலும் திரு டிரம்ப் நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.
அமெரிக்காவின் எச்சரிக்கை
“இந்நடவடிக்கை ஈரானில் பலனளிக்கும். அந்த ஆட்சியை நாங்கள் கவிழ்க்கப்போகிறோம்,” என்று திரு பெசன்ட் அமெரிக்காவின் சிஎன்பிசி ஊடகத்திடம் கூறினார். ஈரான்மீதான கடுமையாக்கப்பட்ட பொருளியல் நடவடிக்கையில் பங்காளிகள், எதிரிகள் ஆகிய இருதரப்பும் தங்களுடன் துணைநிற்கும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“பலதரப்புகள் ஒருங்கிணைந்து, (ஈரானை) பொருளியல்ரீதியாகத் தனிமைப்படுத்துவதற்கான இந்நடவடிக்கை உலக வரலாற்றில் இதுவரை காணப்படாத ஆகப் பெரிய தனிமைப்படுத்தும் நடவடிக்கையாக விளங்கும். எங்களுடன் இருக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்ற கேள்வியை முன்வைப்போம்,” என்று திரு பெசன்ட், பங்காளி நாடுகளிடம் எடுத்துரைத்தார்.
சீனாவுக்கும் குரல்
சீனாமீது அமெரிக்கா நெருக்குதல் அளிக்குமா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அவர், பல உரையாடல்களை ரகசியமாக நடத்துவதே சிறந்தது என்று கூறினார். எனினும், திட்டத்தில் சேர்ந்துகொள்ளுமாறு அவர் சீனாவையும் கேட்டுக்கொண்டார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங், செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ஈரான் விவகாரத்தைப் பற்றி நிச்சயமாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் திரு டிரம்ப் பெய்ஜிங்குக்குப் பயணம் மேற்கொண்டபோதும் ஈரான் போரைப் பற்றிப் பேசப்பட்டது.
இந்தப் பொருளியல் நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதால் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராகப் பெரும்பாலும் கடும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்காது என்று திரு பெசன்ட் குறிப்பிட்டார்.


