வாஷிங்டன்: மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளுக்கு ஏறக்குறைய 8.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்களை (S$10.95) விற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரேல், கத்தார், குவைத், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகியவை இதன் மூலம் பலனடையவிருக்கின்றன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக போர் தொடங்கி ஒன்பது வாரங்கள் ஆன நிலையில் ஆயுத விற்பனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
கத்தாருக்கு பேட்ரியாட் வகை ஆகாயத் தற்காப்பு, ஏவுகணைத் தற்காப்பு முறை விற்கப்படும் என்று மே 1ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. அதன் மதிப்பு 4.01 பில்லியன் அமெரிக்க டாலராகும். அது மட்டுமல்லாமல் $992.4 மில்லியன் மதிப்புள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் நவீன ஆயுதங்கள் (ஏபிகேடபிள்யூஎஸ்) கத்தாருக்கு விற்கப்படும்.
குவைத்துக்கு 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த போர் கட்டமைப்புகளை விற்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை 147.6 மில்லியன் வெள்ளிக்கு அமெரிக்கா விற்கவிருக்கிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுக்கு துல்லியமாக இலக்கைத் தாக்கும் 147.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கத்தார், இஸ்ரேல், ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு ‘ஏபிகேடபிள்யூஎஸ்’ ஆயுத விற்பனையின் ஒப்பந்ததாரர் ‘பிஏஇ சிஸ்டம்ஸ்’ என்று அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு முறை, பேட்ரியாட் ஆகாயத் தற்காப்பு, ஏவுகணைத் தற்காப்பின் ஒப்பந்ததாரர் ஆர்டிஎக்ஸ், லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை ஆகும்.
குவைத்துக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு நார்த்ராம் குருமேனும் ஒப்பந்ததாரராக உள்ளது.

