தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வரிகளை வசூலிக்கத் தொடங்கிய அமெரிக்கா

1 mins read
524a2d9b-d7c6-45d4-83cf-6285acc2bcb9
அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்குச் சுங்கத்துறை அதிகாரிகள் புதிய வரிகளை வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கச் சுங்கத்துறை, இறக்குமதிகள்மீது அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த 10 விழுக்காட்டு அடிப்படை வரியைப் பெரும்பாலான நாடுகளிடமிருந்து வசூலிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரத்திலிருந்து 57 பெரிய வர்த்தகப் பங்காளி நாடுகளிலிருந்து கூடுதல் வரிகள் வசூலிக்கப்படும்.

அமெரிக்காவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுங்கத்துறைக் கிடங்குகள் ஆகியவற்றில் சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 5) நள்ளிரவிலிருந்து திரு டிரம்ப் விதித்த அடிப்படை 10% வரி நடப்புக்கு வந்தது.

திரு டிரம்ப் (ஏப்ரல் 2) அறிவித்த புதிய வரிகள் உலகப் பங்குச் சந்தையை ஆட்டங்காண வைத்தது. எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை கணிசமாகச் சரிந்தது.

திரு டிரம்ப்பின் 10 விழுக்காட்டு வரியை எதிர்கொண்ட முதல் நாடுகளில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கொலம்பியா, ஆர்ஜெண்டினா, எகிப்து, சவூதி அரேபியா ஆகியவை அடங்கும்.

திரு டிரம்ப் அறிவித்த 11 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரையிலான பதில் வரி ஏப்ரல் 9ஆம் தேதி அமல்படுத்தப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பொருள்களுக்குக் கூடுதலாக 20 விழுக்காட்டு வரி வசூலிக்கப்படும்.

சீனா அனுப்பும் பொருள்களுக்குக் கூடுதலாக 34 விழுக்காட்டு வரி செலுத்தவேண்டும். அதன் மூலம் சீனா மீதுள்ள வரிகள் 54 விழுக்காட்டுக்கு உயர்கிறது.

கனடாவும் மெக்சிக்கோவும் திரு டிரம்ப்பின் அண்மைய வரி விதிப்பிலிருந்து தப்பித்தன. அவை ஏற்கெனவே 25 விழுக்காட்டு வரியைச் செலுத்துகின்றன.

வரி விலக்குப் பெற்ற 1,000க்கும் அதிகமான பொருள்களின் பட்டியலையும் திரு டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்