வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டிக்டாக் கணக்கு ஒன்றை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
ஏறக்குறைய 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் அந்தக் குறுங்காணொளிச் செயலி மூலம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் செய்திகளைப் பரப்ப வெள்ளை மாளிகை முடிவெடுத்துள்ளது.
2024 நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் திருவாட்டி கமலா ஹாரிசைப் பின்னுக்குத் தள்ளியதைத் தொடர்ந்து இளம் வாக்காளர்களின் ஆதரவுக்கு டிக்டாக் கைகொடுத்ததாகத் திரு டிரம்ப் இதற்குமுன் குறிப்பிட்டார்.
எனினும், அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்கள் சீன அரசாங்கத்தின் கைகளுக்குக் கிடைக்கக்கூடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.
டிக்டாக் செயலியின் உரிமையாளர்கள் சீன அரசாங்கத்துக்கு உட்பட்டவர்கள் என்றும் செயலி மூலம் அமெரிக்கர்களிடையே அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் இதற்குமுன் பெறப்பட்ட புலனாய்வு மதிப்பீடுகள் தெரிவித்தன.
இருப்பினும், வெள்ளை மாளிகை @whitehouse என்ற கணக்கைத் தொடங்கி செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 19) நேரலையில் சென்று ‘நான்தான் உங்கள் குரல்’ என்று திரு டிரம்ப் கூறும் காணொளியைப் பதிவேற்றியது.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது திரு டிரம்ப் பயன்படுத்திய @realdonaldtrump டிக்டாக் கணக்கை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.
திரு டிரம்ப் தமது செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்க தமது ட்ருத் சோஷல் கணக்கையும் அதிகம் சார்ந்திருக்கிறார். அதோடு அடிக்கடி அவர் எக்ஸ் தளத்திலும் கருத்துகளைப் பதிவிடுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிபர் டிரம்ப்பின் வரலாற்று வெற்றிகளை அமெரிக்கர்களிடம் கொண்டுசேர்ப்பதில் உறுதியாக உள்ள டிரம்ப் நிர்வாகம், கிடைக்குக்கூடிய அனைத்து தளங்களையும் பயன்படுத்துகிறது,” என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கெரொலைன் லீவிட் குறிப்பிட்டார்.
டிக்டாக் செயலியை நிர்வகிக்கும் பைட்டான்ஸ், அமெரிக்க நிறுவனத்திடம் அதை விற்காவிட்டால் தடைசெய்யப்படும் என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது.
எனினும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற திரு டிரம்ப் அந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் டிக்டாக்கிற்கான காலக்கெடுவை ஏப்ரல் தொடக்கத்திற்கு ஒத்திவைத்தார்.
பின் ஜூன் 19ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்த டிரம்ப் இறுதியாக செப்டம்பர் 17ஆம் தேதி வரை அது நீடிக்கும் என்று தெரிவித்தார்.