லெபனான் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு அமெரிக்கா வழிகாட்டும்

லெபனான் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு அமெரிக்கா வழிகாட்டும்

2 mins read
67be62b6-04a1-4be2-899b-f51bf89e6eb8
ஜூன் 26ஆம் தேதி எட்டப்பட்ட ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் துருப்புகளை அனுப்பியுள்ள தெற்கு லெபனான் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படிப்படியாகத் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும். - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: தெற்கில் உள்ள ‘வெளியேறும் மண்டலங்களில்’ இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறும் பணியை அமெரிக்கா மேற்பார்வையிடும் என்றும் அதன் முதற்கட்டப் பணிகள் சில நாள்களில் தொடங்கும் என்றும் லெபனான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஜூலை 9ஆம் தேதி தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு முன்னர், அப்பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என லெபனான் கோரியிருந்ததாக ஒரு தூதரக வட்டாரம் முன்னதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான புதிய பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடைபெறும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜூன் 26ஆம் தேதி எட்டப்பட்ட ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுடன் நீண்டகாலமாகப் போரிட்டு வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா இயக்கமான ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தெற்கு லெபனானில் படைகளை அனுப்பியுள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படிப்படியாகத் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நீண்ட காலமாக அதிகாரமற்று இருந்த லெபனான் ராணுவம், வெளியேறும் மண்டலங்கள் என அழைக்கப்படும் இரண்டு சிறிய பகுதிகளை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.

லெபனானுக்கான அமெரிக்கத் தூதர் மைக்கேல் இசா, அதிபர் ஜோசப் அவுனிடம், “களத்தில் செயல்படுத்துவதற்கான வழிமுறையைத் தீர்மானிப்பதற்காக, ஓர் அமெரிக்க ராணுவக் குழு வரும் நாள்களில் பெய்ரூட்டிற்கு வருகை தரும்,” என்று கூறியதாக லெபனான் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில், ஓர் அமெரிக்க அதிகாரி, “நாங்கள் இந்தக் கட்டமைப்பைச் செயல்படுத்தும் கட்டத்திற்கு முன்னேறியுள்ளோம்,” என்று கூறினார்.

“முதல் வெளியேறும் மண்டலம் இன்னும் சில நாள்களில் தொடங்கப்படும். மேலும் அடுத்தடுத்த வெளியேறும் மண்டலங்கள் வரைபடமாக்கப்பட்டு திட்டமிடப்பட்டு வருகின்றன,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறினார்.

அந்த மண்டலங்கள் தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இரு நாடுகளுடனும் ஒருங்கிணைக்கும் என்று அவர் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“இந்த மண்டலங்களிலும், நாடு முழுவதிலும் இறையாண்மையை திறம்பட மீட்டெடுக்க லெபனான் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக, நாங்கள் விரைவில் அனைத்துலகப் பங்காளிகளுடன் தொடர்புகளைத் தொடங்குவோம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

அடுத்த இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தைகள் ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் ரோமில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்
லெபனான்இஸ்ரேல்தூதர்