சாம்சுங், எஸ்கே ஹைனிக்ஸ் நிறுவனங்களுக்கு 100% வரியை அமெரிக்கா விதிக்காது: தென்கொரியா

1 mins read
9117d9cc-3054-4f03-911c-8726623e64b6
அமெரிக்காவில் உற்பத்தி செய்யாத அல்லது செய்யத் திட்டமிடாத நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பகுதி மின்கடத்திகளுக்குக் கிட்டத்தட்ட 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார் (ஆகஸ்ட் 6). - படம்: புளூம்பெர்க்

சோல்: சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ், எஸ்கே ஹைனிக்ஸ் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கணினிச் சில்லுகளுக்கான 100 விழுக்காட்டு வரியை விதிக்காது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் வர்த்தகத் துறையைச் சேர்ந்த மூத்த தூதர் இயோ ஹான் கூ (Yeo Han-koo) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அந்தத் தகவலை வெளியிட்டார்.

கணினிச் சில்லு வர்த்தகத்தின் தொடர்பில் ஏற்கெனவே வா‌ஷிங்டனுக்கும் சோலுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று இருப்பதாக அவர் சொன்னார். அதன்படி அமெரிக்கா மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் தென்கொரியாவும் அடங்கும் என்றார் திரு இயோ. மேல் விவரம் எதனையும் அவர் தரவில்லை.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யாத அல்லது செய்யத் திட்டமிடாத நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பகுதி மின்கடத்திகளுக்குக் கிட்டத்தட்ட 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) கூறியிருந்தார். அது குறித்து இரு நிறுவனங்களும் கருத்து எதனையும் கூறவில்லை.

அமெரிக்காவில் கணினிச் சில்லுகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களுக்குப் புதிய வரி பொருந்தாது. திரு டிரம்ப் புதிய வரி பற்றி முறையாக அறிவிக்கவில்லை. அதனால் தொடர்ந்து கணினிச் சில்லு வரி குறித்துத் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

இந்நிலையில் தைவான் பகுதி மின்கடத்தி உற்பத்தி நிறுவனத்துக்கு (TSMC) கணினிச் சில்லு வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று தைவான் கூறியுள்ளது.

அந்நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தொழிற்சாலைகள் இருப்பதே காரணம் என்று தைவான் கூறியது.

குறிப்புச் சொற்கள்