அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது மாது ஒருவர், கடந்த ஆண்டு 13 வயதுச் சிறுவன் ஒருவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றதை ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த மாது சிறைவாசம் செல்லமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்ட ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர் சிறைவாசம் செல்லாமல் இருக்க அவருடைய வழக்கறிஞர்களும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களும் உடன்பாடு செய்துகொண்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கர்ப்பமடைந்த ஆண்ட்ரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து இப்போது 14 வயதாகும் சிறுவனின் தாயார் கூறுகையில், "என் மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன். இப்போது அவன் தந்தையாக வேண்டும். அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதனுடனேயே அவன் வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறான்.
"இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக இருந்திருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். அந்த மாது ஓர் ஆணாகவும் என் மகன் ஒரு சிறுமியாகவும் இருந்திருந்தால் தீர்ப்பு வித்தியாசமாக இருந்திருக்கும் என்று உணர்கிறேன்," என்றார்.
இந்த வழக்கில் ஆண்ட்ரியாவுக்கு பாலியல் குற்றவாளி என்ற குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக விசாரணை மே மாதம் நடைபெறுகிறது.