வீட்டை நோக்கிப் படையெடுத்த ‘ரக்கூன்’ கூட்டம்; பெண் ஓட்டம்

1 mins read
63f7e269-337c-4598-a237-9e1b3114bd51
அக்டோபர் 3ஆம் தேதி உணவுக்காக கிட்டத்தட்ட 100 ரக்கூன்கள் ஒரு பெண்ணின் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தன. - படம்: சமூக ஊடகம்

வா‌ஷிங்டன்: வா‌ஷிங்டன் மாநிலத்தில் உள்ள பால்ஸ்போ பகுதியில் வாழும் பெண் ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக தமது வீட்டிற்கு பின்னால் உள்ள இடத்தில் சில ரக்கூன் விலங்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.

ஆனால் 6 வாரங்களுக்கு முன்னர் அவர் வீட்டிற்குப் பின்னால் உள்ள இடத்திற்கு வரும் ரக்கூன்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.

நாளுக்கு நாள் அப்பெண்ணின் வீட்டைச் சுற்றி ரக்கூன்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. உணவு கிடைக்கும் வரை அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் அவை சுற்றித் திரிந்தன.

புதிதாக வந்த ரக்கூன்கள் சில உணவுக்காக அப்பெண்ணை தாக்கவும் செய்துள்ளன.

இந்நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி உணவுக்காக கிட்டத்தட்ட 100 ரக்கூன்கள் அப்பெண்ணின் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தன.

அதைப்பார்த்ததும் பதறிய அப்பெண் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து உதவி கேட்டார். அதைத்தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

சம்பவம் தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

ரக்கூன்களைப் பிடிக்க விலங்கு பயிற்றுவிப்பாளர்கள் ஒரு ரக்கூனுக்கு 650 வெள்ளி கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு கிடைக்காததால் ரக்கூன்களும் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறின.

காட்டு விலங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அவ்வட்டாரவாசிகளை கேட்டுக்கொண்டனர். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்புச் சொற்கள்