7 ஆண்டுகளாக காணாமல்போன அமெரிக்கப் பெண் கண்டுபிடிப்பு

7 ஆண்டுகளாக காணாமல்போன அமெரிக்கப் பெண் கண்டுபிடிப்பு

1 mins read
5a3b9eaa-9809-4ede-8442-431f0804d062
அதிகாரிகள் அறைக்குள் வலுக்கட்டாயமாகச் செல்லவேண்டியிருந்தது. - படம்: பிக்சாபே

மிச்சிகன்: ஆள்கடத்தல் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை அமெரிக்கக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் பெண் ஏழு ஆண்டுகளாகக் காணாமல்போயிருந்தார்.

மிச்சிகனின் இங்ஸ்டர் பகுதியில் உள்ள தங்கும்விடுதி ஒன்றில் அந்தப் பெண் அலறிக்கொண்டிருந்ததைக் கேட்ட காவல்துறையினர் அங்குச் சென்று அவரைக் காப்பாற்றினர்.

அந்தப் பெண்ணின் அடையாளம் வெளியிடப்படவில்லை. தமது விருப்பத்திற்கு எதிராக தாம் தங்கும்விடுதியில் வைக்கப்பட்டிருந்ததாக தமது மாற்றான் பெற்றோரைத் தொடர்புகொண்டு அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டில் காணாமல்போன அந்தப் பெண் ‘எவர்கிரீன் ஹோட்டல்’லிருந்து மீட்கப்பட்டதாக மிச்சிகன் காவல்துறை தெரிவித்தது.

“ஒரு வித அழுகை கலந்த அலறலைக் கேட்டு, குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்றோம்,” என்று மிச்சிகன் அரசாங்க காவல்துறை அதிகாரி மைக் ஷோ, ‘டபிள்யூஎக்ஸ்ஒய்ஸெட்’ எனும் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழையவேண்டியிருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் காயமின்றி காணப்பட்டார். இருப்பினும், போதைப்பொருள்களும் துப்பாக்கி ஒன்றும் அந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.

அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்தப் பெண், தற்போது தமது குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார்.

ஆள்கடத்தல் சம்பவங்களில் நிபுணத்துவம் பெற்ற துப்பறிவாளர்கள் காணாமல்போனவர்களின் வழக்குகளைத் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்